2018-04-02 14:50:00

இமயமாகும் இளமை : பாகுபாட்டை எதிர்த்துப் போராடிய இளைஞர்


Ida Bell Wells-Barnett என்பவர், அமெரிக்க ஐக்கிய நாட்டில், தனது 27வது வயதில், இனப் பாகுபாட்டிற்கு எதிராகத் துணிச்சலாகப் போராடியவர். வலைப்பொறிக்குள், நாயாக அல்லது எலியாக இறப்பதைவிட, அநீதிக்கு எதிராகப் போராடி இறப்பது சிறந்தது என உணர்கிறேன் என்று கூறியவர். ஐடா பி.வெல்ஸ் (Ida B. Wells) என பொதுவாக அறியப்படும் இவர், ஆப்ரிக்க-அமெரிக்க செய்தியாளர், செய்தித்தாள் ஆசிரியர், வாக்குரிமை ஆர்வலர், சமூகவியலாளர், பெண்ணுரிமையாளர். இவர், 1862ம் ஆண்டில், அமெரிக்காவில் அடிமையாக வாழ்ந்த குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தார். இவர் பிறந்து ஏறத்தாழ ஆறு மாதங்கள் சென்று, அமெரிக்காவில் விடுதலை சட்டம் அறிவிக்கப்பட்டபோது, இவரது குடும்பமும், ஏனைய ஆப்ரிக்க அடிமைகளும் சுதந்திரம் பெற்றனர். இவர் Shaw பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். ஆயினும், இவருக்கு 16 வயது நடந்தபோது, இவரது பெற்றோரும், ஓர் உடன்பிறப்பும் மஞ்சள் காய்ச்சலால் இறந்தனர். இதனால் படிப்பைக் கைவிட நேர்ந்தது. இதற்குப் பின்னர், உறவினர்கள், இவரது உடன்பிறப்புக்களைப் பிரிக்க முயற்சித்தபோது, அதைத் தடுத்து நிறுத்தி, உடன்பிறப்புக்களை வளர்க்கும் பொறுப்பை தானே ஏற்றார். 1882ம் ஆண்டில் தன் சகோதரிகளுடன் Memphisல் குடியேறினார் இவர். 18வது வயதில், ஒரு கறுப்பின பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்த வெல்ஸ், Fisk பல்கலைக்கழகத்தில் படிப்பையும் தொடர்ந்தார். 1884ம் ஆண்டு மே மாதத்தில், Memphis லிருந்து Nashvilleவுக்கு இரயிலில் முதல் வகுப்பில் பயணச் சீட்டு வாங்கி அமர்ந்திருந்தார் இவர். ஆனால் பயணச்சீட்டு பரிசோதகர், இவரை முதல் வகுப்பு பெட்டியிலிருந்து, ஏற்கனவே கூட்டம் நெரிசலாக உள்ள, ஆப்ரிக்க-அமெரிக்க இரயில் பெட்டிக்குக் கட்டாயமாக அனுப்பி வைத்தார். இந்த அநீதியால் பாதிக்கப்பட்ட வெல்ஸ், அந்நாட்டின் தென் பகுதியில் நிலவிய இன வெறி மற்றும் அரசியலை எதிர்த்து எழுதினார். இவர் எழுதிய கட்டுரைகள் பல கறுப்பின செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களில் வெளியாயின. இவர் இனப் பாகுபாட்டை எதிர்த்து எழுதியதற்காக, 1891ம் ஆண்டில் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர், இவரின் நண்பரும், இவரோடு தொடர்புடைய இரு வர்த்தகர்களும் கொல்லப்பட்டதை எதிர்த்துப் போராடினார். நியாயமான விசாரணையின்றி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது உட்பட்ட தண்டனைகளில் சீர்திருத்தம் அவசியம் என, அமெரிக்க அரசுத்தலைவருக்கு அழைப்பு விடுத்து போராடினார். 1895ம் ஆண்டில் Ferdinand Barnett என்பவரை மணந்தார். குடும்பப் பெயரில், தன் கணவர் பெயரோடு, தன் பெயரையும் சேர்த்து வைத்துக்கொண்ட அமெரிக்கப் பெண்களில் இவரும் ஒருவர். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட வெல்ஸ் அவர்கள், 1931ம் ஆண்டு மார்ச் 25ம் நாள், தனது 68வது வயதில் சிக்காகோவில் காலமானார். எந்தவித கடும் எதிர்ப்புகள் வந்தபோதிலும், தன் எழுத்துக்கள், உரைகள் மற்றும் போராட்டங்களால், முற்சார்பு எண்ணங்களுக்கு எதிராக இறுதிவரை துணிச்சலாகப் போராடியவர் ஐடா வெல்ஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.