2018-04-03 16:16:00

ஏமனில் 18 இலட்சம் குழந்தைகளுக்கு போதிய சத்துணவில்லை


ஏப்.03,2018. ஏமன் நாட்டின் Hodeida நகரில் இத்திங்களன்று இடம்பெற்ற தாக்குதலில் பல குழந்தைகள் உயிரிழந்தும், பலர் காயமுற்றும், எண்ணற்றோர் காணாமல்போயும் உள்ளது குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது, யுனிசெஃப் என்ற, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பு.

2015ம் ஆண்டு மார்ச் மாதம் ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் துவங்கியதிலிருந்து, தற்போதுதான் இவ்வளவு பெரிய அளவில் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தெரிவித்த யுனிசெஃப் அமைப்பு, மோதல்களில் ஈடுபட்டுள்ள குழுக்கள் எதுவும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விதிகளை கடைப்பிடிப்பதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது.

ஏமனில் மனிதாபிமான உதவிகளைச் சார்ந்திருக்கும் 2 கோடியே 22 இலட்சம் பேரில், 1 கோடியே 13 இலட்சம் பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள் எனக் கூறும் யுனிசெஃப் அமைப்பு, 5 வயதிற்குட்பட்ட ஏறத்தாழ 18 இலட்சம் குழந்தைகள், போதிய சத்துணவின்றி வாடுவதாகவும் தெரிவிக்கிறது.

2015ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரை ஏமன் நாட்டில் 2195 குழந்தைகள் போரால் உயிரிழந்துள்ளனர், 3387 குழந்தைகள் ஊனமாகியுள்ளனர், மற்றும், 2419 குழந்தைகள் போரிடும் துருப்புகளால் ஆயுதம் தாங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.