சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 1

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் - RV

04/04/2018 15:50

ஏப்.04,2018. அது கி.பி.386ம் ஆண்டு. அந்த மனிதர் கிறிஸ்தவத்திற்கு மனம் மாறியிருந்த காலம் அது. அந்த ஆண்டு கோடைகாலத்தில் ஒருநாள், இத்தாலியின் மிலான் நகரில், அந்தப் பூங்காவில், அத்திமரத்துக்கு அடியில் அமர்ந்துகொண்டு, தனது பழைய பாவ வாழ்வு பற்றிச் சிந்தித்துக் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார் அவர். அப்போது அவ்வழியே கிறிஸ்தவ இளைஞர் குழு ஒன்று கடந்து சென்றது. அதில் ஓர் இளைஞர், நான் பாலைநிலம் சென்று, தவவாழ்வு மேற்கொள்ளப் போகிறேன் என்றார். அவரைத் தொடர்ந்து ஏனையோரும், ஒருவர் பின் ஒருவராக, தவ வாழ்வு மேற்கொள்வதற்குரிய ஆவலைத் தெரிவித்துக்கொண்டு சென்றனர். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த மனிதர், இவர்கள் எல்லாம் இவ்வாறு தீர்மானிக்கும்போது, என்னாலும் முடியாதா என்று சிந்தித்தார். அந்நேரத்தில், பக்கத்து வீட்டிலிருந்து, "Tolle, lege; tolle, lege," அதாவது "எடுத்து வாசி" என்ற ஒரு குழந்தையின் குரலை திரும்பத் திரும்பக்  கேட்டார் அவர்.  முதலில் அக்குரலின் பொருளை அவர் உணரவில்லை. ஒரு குழந்தை எதற்கு இப்படிச் சொல்ல வேண்டும் என சிந்தித்தார். இக்குரல் உண்மையாகவே கடவுளிடமிருந்து வந்ததாகவும், கடவுளுடைய வார்த்தை அடங்கிய திருவிவிலியத்தை எடுத்து வாசித்தால், தான், தன் வாழ்வின் பொருளை அறிந்து கொள்ளலாம் எனவும் அவர் உள்ளூர உணர்ந்தார். எனவே விவிலியத்தை எடுத்துத் திறந்தார் அவர். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 13ம் பிரிவு அவர் கண்ணில் பட்டது.

இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக!  தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்(உரோ.13:13-14) 

பவுலடிகளாரின் இந்த திருச்சொற்களை வாசித்தபோது, தன் வாழ்வில் அடிப்படையான மாற்றம் தேவை என்பதை உணர்ந்தார் அவர். கடவுளே தன்னிடம் நேரிடையாகத் தம் உள்ளத்தில் பேசுவதாகவும், கடவுள் தனது பழைய பாவங்களைச் சொல்லி, மன்னிப்பு வழங்குவதாகவும், தன் வாழ்வை சீர்திருத்த கடவுள் அழைப்பு விடுப்பதாகவும், அதற்குத் தேவையான அருளைப் பொழிவதற்கு உறுதி வழங்குவதாகவும், அதைச் செய்வதற்குரிய சக்தியை அளிப்பதாகவும் உணர்ந்தார் அவர். அதற்குப் பிறகு தன்நிலை உணர்ந்து அழுது கண்ணீர் சிந்தி, கடவுளிடம் முழுமையாக சரண் அடைந்தார். பின்னாளில் இந்த அனுபவத்தை நினைத்து அவர் இவ்வாறு எழுதியுள்ளார்... 

ஓ ஆண்டவரே, உம்மை அன்புகூர இவ்வளவு நாள் தாமதம் செய்துவிட்டேனே. நான் உம்மோடு இல்லாதபோது, நீர் என்னோடு இருந்தீர். நீர் என்னுள் இருந்தீர். நான் உம்மில் இல்லை. நீர் என்னை அழைத்து, எனது காதுகேளாமையைத் தகர்த்தீர். நீர் என்னுள் ஒளிர்ந்து, எனது பார்வையின்மையை அகற்றினீர். நீர் என்னைத் தொட்டீர். நான் உம் அமைதிக்காகப் பற்றி எரிந்தேன். இறைவா, உம்மில் அமைதி காணும்வரை எம் இதயங்கள் இளைப்பாறுவதில்லை. என்றென்றும் பழையதும் புதியதுமான அழகே, உம்மை இவ்வளவு தாமதித்து அன்புகூர்கின்றேனே. நீர் என் கட்டுக்களை அவிழ்த்து விட்டீர். உமக்கே என் புகழை அர்ப்பணிக்கின்றேன்.

இவ்வாறு, காலம்தாழ்த்தி தான் அனுபவித்து சுவைத்த கடவுளின் அன்பு பற்றி எழுதியிருப்பவர் ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன். தன்நிலை உணர்தல் எனப்படும் Confessiones நூலில் இப்புனிதர் இவ்வாறு எழுதியுள்ளார். தன் பாவ நிலையை எண்ணி வருந்தி, கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு இவர் எழுதியுள்ள இந்நூல், எல்லாக் காலத்திற்கும், மாபெரும் கிறிஸ்தவச் சாட்சியங்களாகத் திகழ்கின்றது. தன் இளமைக்கால அனுபவங்களையும், தவறான வழியில் தான் சென்றதையும், இந்நூலில் இவர் விரிவாக வடித்துள்ளார். காட்டில் கடும் தவ வாழ்வு வாழ்ந்த, புனித வனத்து அந்தோனியாரின் வாழ்க்கையைப் படித்த புனித அகுஸ்தீன், தானும் தூய வாழ்வு நடத்த வேண்டும் என்றும், தவறான கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்றும், கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என்றும் முடிவுசெய்தார். அதனால் ஆசிரியப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திருமணம் செய்யும் எண்ணத்தையும் கைவிட்டார். கடவுளுக்கே தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். இவர் எழுதிய, "கடவுளின் நகரம்" (City of God) எனும் மற்றொரு நூல், மிகவும் புகழ் பெற்றது. திருஅவை என்பது கடவுளை வழிபடுகின்ற சமூகம் என்பதால், ஆன்மீக முறையில் கடவுளின் நகரமாக உள்ளது என்றும், இது உலகம் என்னும் பொருண்மைசார் நகரத்திலிருந்து வேறுபட்டது என்றும் ஒரு கருத்தை இவர் முன் வைத்தார். இவரது சிந்தனைகள் மத்தியகால கலாச்சாரத்திலும் உலகநோக்கிலும் தாக்கத்தைக் கொணர்ந்தன.

கிறிஸ்தவ உலகில் மிகவும் மதித்துப் போற்றப்படும் புனிதரான, ஹிப்போ நகர் அகுஸ்தீன், தொடக்க காலத் திருஅவையில் மாபெரும் அறிவாளிகளாக விளங்கியவர்களில் ஒருவர். இவர், ஓர் இறையியலாளர். புனித அகுஸ்தீன், கிறிஸ்தவ உலகில் தலைசிறந்த "திருஅவை தந்தை" என்று மதிக்கப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

04/04/2018 15:50