2018-04-04 15:34:00

மறைக்கல்வியுரை : நற்கருணையின் மனிதர்களாக வாழ அழைப்பு


ஏப்.,04,2018. இப்புதனன்று அதிகாலையிலிருந்தே மழைத்தூறிக் கொண்டிருந்தாலும்,  திருத்தந்தையின் புதன் மறைக்கல்விக்குச் செவிமடுக்க வந்த திருப்பயணிகளின் கூட்டத்திற்கு குறைவில்லை. திருப்பயணிகள் பல வண்ணக்குடைகளைத் தாங்கி, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருக்க, திருப்பலி குறித்த தன் மறைக்கல்வி உரையின் இறுதிப் பகுதியை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். பாஸ்காப் பெருவிழாக் காலத்தில் குழுமியிருக்கும் நாம், இன்று ஒன்றிணைந்து நம் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு 'இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களை ஓங்கிய குரலில் தெரிவிப்பதோடு, நம் கைகளைப் பலமாகத் தட்டியும் அவரை வாழ்த்துவோம்' எனக் கூறி தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார்.

அன்பு சகோதர சகோதரிகளே, திருப்பலி குறித்த மறைக்கல்வித் தொடரில், இன்று திருப்பலிச் சடங்கின் இறுதிப் பகுதி குறித்து நோக்குவோம். திருவிருந்து கொண்டாட்டங்களைத் தொடர்ந்துவரும் செபத்திற்குப்பின், திருப்பலியில் குழுமியிருக்கும் மக்களை ஆசீர்வதிக்கிறார் அருள்பணியாளர். தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் திருப்பலி எவ்வாறு ஆரம்பமானதோ, அவ்வாறே, அதே மூவொரு கடவுளின் பெயரால் நிறைவும் பெறுகிறது. ஆண்டவரின் மீட்பளிக்கும் இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக கிடைத்த தெய்வீக வாழ்வில் பங்குபெறும்படி, மூவொரு கடவுள் நமக்கு அழைப்பு ஒன்றையும் விடுக்கிறார்.  நாம் அமைதியில் வாழவும், இறை ஆசீரை உலகிற்கு எடுத்துச் செல்லவும், நம் வாழ்வு வழியாக இறைவனைப் புகழவும் அழைப்பு விடுத்து திருப்பலி நிறைவுறுகின்றது. நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் நாம் முழுமையாக இயேசுவில் உறுதிச் செய்யப்பட்டவர்களாக, நற்கருணையின் மனிதர்களாக வாழ திருப்பலிக் கொண்டாட்டம் நமக்குக் கற்பிக்கிறது. திருப்பலிக்குப்பின் ஆண்டவரின் உண்மை இருப்பு, திருநற்கருணையில் தொடர்கிறது. திருப்பலியின் கனிகள் என்பவை, நாம் புனிதத்துவத்தில் வளரவும், திருஅவையுடன் ஒன்றிப்பில் நம் சகோதரர், சகோதரிகளுக்கு, குறிப்பாக, உதவி தேவைப்படும் மக்களுக்கு அன்புடன் பணியாற்ற வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக திருநற்கருணை உள்ளது. செம்மறியின் திருமண விருந்து வழங்கும் முடிவற்ற மகிழ்வில், நாம் நிரந்தரமாகப் பங்குபெறும் அந்த கடைசி நாள்வரையிலான நம் விசுவாசப் பயணத்தில், ஒவ்வொரு நாளின் திருப்பலி விருந்து நம்மை பலப்படுத்துவதாக. 

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.