சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

கிங் நினைவாக, 39 முறை ஒலித்த வாஷிங்டன் கோவில் மணி

ஜாக்சன் தீயணைப்பு துறை 39 முறை ஒலித்த நினைவு மணி - AP

05/04/2018 15:32

ஏப்.05,2018. அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியுரிமை போராட்டத்தை முன்னின்று நடத்திய மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கொலையுண்டதன் 50ம் ஆண்டு நிறைவு, ஏப்ரல் 4, இப்புதனன்று, சிறப்பிக்கப்பட்ட வேளையில், வாஷிங்டன் கத்தோலிக்க தேசிய திருத்தலத்தின் கோவில் மணி, கிங் அவர்களின் 39 ஆண்டுகால வாழ்வை நினைவுறுத்தும் வண்ணம், 39 முறை ஒலிக்கப்பட்டது.

“தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவான் 15:13) என்ற நற்செய்தி கூற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, முனைவர் மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் வாழ்வு அமைந்தது என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் உயர் மட்டக் குழு, அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இவ்வாண்டு, மார்ச் 12ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் கடைசி மகள், Bernice Albertine King அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்த வேளையில், தன் தந்தை எழுதியிருந்த உரைகள் மற்றும் மடல்கள் அடங்கிய ஒரு நூலை, திருத்தந்தைக்கு பரிசாக அளித்தார்.

குடியுரிமை இயக்கத்தின் ஆர்வலராகப் பணியாற்றிவரும் Bernice King அவர்கள், இத்தாலியின் பீசா நகரில் அமைந்துள்ள காந்தி மையம் அவருக்கு வழங்கிய ஒரு விருதை பெறுவதற்காக இத்தாலி வந்த வேளையில் திருத்தந்தையைச் சந்தித்தார்.

மிசூரி மாநிலத்தின் மெம்பிஸ் நகரில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிவந்த கறுப்பின தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதாக அந்நகருக்கு சென்றிருந்த மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்களை, சிறையிலிருந்து தப்பித்த James Earl Ray என்ற கைதி, 1968ம் ஆண்டு, ஏப்ரல் 4ம் தேதி, Lorraine Motel என்ற உணவு விடுதியில் சுட்டுக் கொன்றார்.

கிங் அவர்கள் கொலையுண்டபோது, Bernice King அவர்களுக்கு 5 வயது. அவர் தற்போது, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் பெயரால் இயங்கிவரும் வன்முறையற்ற சமுதாய மாற்ற மையத்தின் இயக்குனராகப் பணியாற்றுகிறார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

05/04/2018 15:32