2018-04-05 15:39:00

ஆல்ஃபி இவான்ஸ் பெற்றோருக்கு திருத்தந்தையின் ஆதரவு


ஏப்.05,2018. ஆல்ஃபி இவான்ஸ் (Alfie Evans) என்ற 22 மாதக் குழந்தையின் வாழ்வு பாதுக்காக்கப்படுவதை தான் முழு மனதாக விரும்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 4, இப்புதன் இரவு, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"சிறு குழந்தை ஆல்ஃபி இவான்ஸ் வாழ்வை பரிவுடன் பாதுகாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவனது பெற்றோரின் ஆழ்ந்த வேதனைக் குரல் கேட்கப்பட வேண்டும் என்றும் நான் முழுமனதுடன் நம்புகிறேன். நான் ஆல்ஃபிக்காகவும், அவனது குடும்பம், மற்றும் அவனுடைய நலனில் ஈடுபட்டுள்ள அனைவருக்காகவும் வேண்டி வருகிறேன்" என்ற டுவிட்டர் செய்தியை திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

கண்டுபிடிக்க இயலாத அரியவகை மூளைக்கோளாறுடன் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆல்ஃபி என்ற குழந்தை, கடந்த 22 மாதங்களாக சுய நினைவிழந்த நிலையில் இயந்திரங்கள் வழியே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளான்.

அவனது உயிரைக் காக்கும் இயந்திரங்களை நீக்கிவிடலாம் என்று நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து, ஆல்ஃபியின் பெற்றோர் போராடிவருகின்றனர்.

இங்கிலாந்தில், 2017ம் ஆண்டு, குணமாக்க முடியாத நோயினால் துன்புற்ற சார்லி கார்ட் (Charlie Gard) என்ற மற்றொரு குழந்தையின் பெற்றோரும், மருத்துவமனையின் முடிவுக்கு எதிராக, இதே போல் போராடிய வேளையில், அவர்களுக்கு ஆதரவாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.