2018-04-05 15:24:00

கிங் 50ம் ஆண்டு நினைவுக்கு ஐ.நா. பொதுச்செயலரின் அறிக்கை


ஏப்.05,2018. கறுப்பின மக்களின் குடியுரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் அயரா உழைப்பை அடிப்படையாகக் கொண்டு, இவ்வுலகில் சமத்துவம் மற்றும் சமுதாய நீதிக்கென தீவிரமான பணிகள் தொடர வேண்டும் என்று, ஐ.நா. அவையின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், வேண்டுகோள் விடுத்தார்.

ஏப்ரல் 4, இப்புதனன்று, கிங் அவர்கள் கொலையுண்டதன் 50ம் ஆண்டு நினைவை சிறப்பிக்கும் வகையில், கூட்டேரஸ் அவர்கள் விடுத்துள்ள ஒரு செய்தியில், இன்றும் மனித உரிமைகளுக்காகப் போராடும் அனைவருக்கும், கிங் அவர்கள், ஓர் உந்து சக்தியாக உள்ளார் என்று கூறினார்.

வேற்றுமைகள் நடுவிலும் நம்மால் ஒன்றுபட்டு வாழமுடியும் என்பதற்கு ஆதரவாகவும், சமுதாயப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் கிங் அவர்கள் எழுப்பிய குரல், இன்றைய உலகில் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று கூட்டேரஸ் அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

35 வயதான மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களுக்கு 1964ம் ஆண்டு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டபோது, மிகக் குறைந்த வயதில் இவ்விருதைப் பெற்றவர் என்ற புகழைப் பெற்றார். 1968ம் ஆண்டு, கிங் அவர்கள் கொலையுண்டபின், 1978ம் ஆண்டு, அவருக்கு ஐ.நா.அவையின் மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.