2018-04-07 13:45:00

இறை இரக்கத்தின் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


“Empty vessels make the most noise” அதாவது, 'காலியான குடங்கள் பெருமளவு ஒலியெழுப்பும்' என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. "உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்" (மத்தேயு 12:34) என்ற நற்செய்தி கூற்றுக்கு மாறாக, உள்ளத்தின் வெற்றிடமும் உளறல்களாக வெளிப்படும் என்பதை, நாம் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். உள்ளத்திலும், சிந்தனையிலும் வெற்றிடம் கொண்டிருப்போர், தேவையில்லாமல் பேசி, தங்கள் மதிப்பை இழந்துபோவர் என்ற எதிர்மறையான கருத்தை இந்த ஆங்கிலப் பழமொழி வலியுறுத்துகிறது.  இதற்கு இணையாக, தமிழில் அழகியதொரு பழமொழி உண்டு. "நிறை குடம் தளும்பாது. குறை குடம் கூத்தாடும்" என்ற அந்தப் பழமொழி, நேர்மறையான, மற்றும், எதிர்மறையான எண்ணங்களைத் தாங்கி வருகிறது.

கிறிஸ்தவ வரலாற்றை, பின்னோக்கிப் பார்க்கும்போது, 'காலியான கல்லறை'யொன்று எதிர்மறையான, நேர்மறையான ஒலிகளை எழுப்பியுள்ளதை உணர்கிறோம். கிறிஸ்து உயிர்த்தபின், அவர் காலியாக விட்டுச்சென்ற கல்லறை, சந்தேகங்களை எழுப்பியுள்ளது, சண்டைகளை உருவாக்கியுள்ளது. அண்மையில், இந்தியாவில், கிறிஸ்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து ஒருவர் கூறிய கருத்துக்கள், 'குறைகுடம் கூத்தாடும்' என்ற பழமொழியை மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்தன. இத்தகையக் குறை குடங்களின் கூச்சல்களை தாண்டி, இயேசுவின் உயிர்ப்பு என்ற பேருண்மையைப் பறைசாற்றும் காலத்தை நாம் கொண்டாடி வருகிறோம்.

கிறிஸ்துவின் உயிர்ப்பு துவக்கத்திலிருந்தே சந்தேகத்தை உருவாக்கியது என்றாலும், அந்த சந்தேகங்கள் தெளிந்தபின் தோன்றிய சத்தியங்கள், கோடான கோடி கிறிஸ்தவர்களை மறைசாட்சிய மரணம்வரை இட்டுச் சென்றுள்ளன. சந்தேகத்திலிருந்து விடுபட்டு, சத்தியத்தை உணர்ந்தபின், அந்த சத்தியத்தை, தன் சாவுவரை, அறிக்கையிட்ட மறைசாட்சிகளில் முக்கிய இடம் வகித்தவர், திருத்தூதர் தோமா. அவரும், உயிர்த்த இயேசுவும் சந்தித்த நிகழ்வை, இந்த ஞாயிறன்று நாம் கொண்டாடுகிறோம்.

சந்தேகமும், இரக்கமும் சந்திக்கும் ஞாயிறு இது. உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறை 'இறை இரக்கத்தின் ஞாயிறு' என்று கொண்டாடுகிறோம். இறை இரக்கம், அல்லது, இறைவனின் பேரன்பு என்ற கதிரவன் எழும்போது, சந்தேகப் பனிமூட்டம் கலைந்துவிடும் என்பதை, இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. உயிர்த்த இயேசு, இன்று நம்முன் தோன்றினால், உடனே, அவர் திருவடி பணிந்து, நம் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வெளியிட நமக்கு எவ்விதத் தயக்கமும் இருக்காது.

ஆனால், முதல் உயிர்ப்புத் திருவிழாவில், இத்தகைய மகிழ்வோ, நிறைவோ, உற்சாகமோ இருந்ததாகத் தெரியவில்லை. அது ஒரு திருவிழாவாக இருந்ததா என்பதே சந்தேகம்தான். உயிர்த்த இயேசுவை, சீடர்கள் சந்தித்த நிகழ்வுகள் அனைத்திலும், அடிப்படையில் இழையோடிய ஓர் உணர்வு, சந்தேகம். இந்நிகழ்வுகள் அனைத்தின் சிகரமாக, இன்று, நாம் நற்செய்தியில் காண்பது, சந்தேகம் கொண்டிருந்த தோமாவை இயேசு சந்தித்த அழகான நிகழ்ச்சி.

நம் வாழ்வை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே அதிக ஆபத்தானது எது தெரியுமா? சந்தேகம். சந்தேகம், ஒரு கூட்டு உணர்வு; பல உணர்வுகளின் பிறப்பிடம் அது. சந்தேகம் குடிகொள்ளும் மனதில், கூடவே, பயம், வருத்தம், விரக்தி என்ற பல உணர்வுகள் கூட்டுக் குடித்தனம் செய்யும்.

சந்தேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக, விவிலியத்தில் கூறப்படும் ஒரு மனிதர், தோமா. உண்மை பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரைப் "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அதேபோல், சந்தேகப்படும் யாரையும், “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம், தோமா, சந்தேகத்தின் மறுபிறவியாக மாறிவிட்டார்.

தோமா, இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும், நம்மில் பலர், (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்) உடனே, ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்துகொள்கிறோம். "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்ற கேள்வியை கேட்டு, "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு" என்ற தீர்ப்பையும் எழுதிவிடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறி அமர்வதும், அடுத்தவர் மீது தீர்ப்பை எழுதுவதும் எளிது. ஒரு விரலை நீட்டி, தோமாவை, குற்றவாளி என்று சுட்டிக்காட்டும்போது, மற்ற மூன்று விரல்கள் நம் பக்கம் திரும்பியுள்ளதை எண்ணி, கொஞ்சம் நிதானிப்போம்.

இயேசுவின் உயிர்ப்பைப்பற்றி தலைமுறை, தலைமுறையாய், ஆயிரமாயிரம் விளக்கங்களை வழங்கிவரும் கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்துள்ள நமக்கே, அந்த உயிர்ப்பு குறித்த விசுவாசத்தில் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. அப்படியிருக்க, உயிர்ப்பைப்பற்றி தெளிவற்ற எண்ணங்கள் கொண்டிருந்த யூத சமுதாயத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வளர்ந்த சீடர்களில் ஒருவர், இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகித்தார் என்பதற்காக அவரைக் கண்டனம் செய்வது தவறு. தீர்ப்பிடுவது தவறு.

கல்வாரியில், இயேசு இறந்ததை, நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒருவேளை, தோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். எனவே, தீர்ப்பு வழங்க நாம் அமர்ந்திருக்கும் நீதி இருக்கைகளிலிருந்து முதலில் எழுவோம். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்த நிகழ்வைச் சிந்திப்போம்.

உயிர்த்த இயேசுவைக் கண்டதும், ஏனையச் சீடர்களுக்கும் கலக்கம், குழப்பம், சந்தேகம் எழுந்தன என்பதை நற்செய்திகள் கூறுகின்றன (மத்தேயு 28:17; மாற்கு 16:13-14; லூக்கா 24:37-39). இயேசுவிடம் கேட்கமுடியாமல், மற்ற சீடர்கள் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச் சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லாச் சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

தங்கள் குடும்பங்களையும், மீன் பிடிக்கும் தொழிலையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள், இச்சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில், இயேசுதான் தங்களது உலகம் என்று, அவர்கள், கண்ணும், கருத்துமாய் வளர்த்துவந்த நம்பிக்கை மரம், ஆணி வேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவை அடித்தளமாய் வைத்து, அவர்கள் கட்டியிருந்த கனவுக் கோட்டைகளெல்லாம், தரை மட்டமாக்கப்பட்டன.

எருசலேமில், கல்வாரியில், அவர்கள் கண்ட காட்சிகள், அவர்களை முற்றிலும் நிலை குலையச் செய்துவிட்டன. இயேசுவின் கொடுமையான மரணம், அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன. யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர். தங்களில் ஒருவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததால், தங்களில் ஒருவர் இயேசுவை மறுதலித்ததால், இதுவரை அவர்கள், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது. சிலுவையில் கந்தல் துணிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை, உடலோடு புதைப்பதற்கு முன்பே, மனதால் அவரைப் புதைத்துவிட்டனர் சீடர்கள்.

நம் வாழ்வையும் சந்தேகம் ஆட்டிப் படைக்கும்போது நாம் செய்வது என்ன? உள்ளத்தையும், சிந்தனையையும், இறுகப் பூட்டிவிட்டு, இருளில் புதையுண்டு போகிறோம். உறவுகளில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் சிறந்த வழி என்ன? மனம் விட்டுப் பேசுவது. இதைத்தான் இயேசு செய்துகாட்டினார். மனதில் துளிர்க்கும் சந்தேகத்தை வேரறுக்க, வாய் வார்த்தைகள் மட்டும் போதாது. ஆங்கிலத்தில் சொல்வதுபோல், சில வேளைகளில், 'physical proof', அதாவது, உடலளவு நிரூபணங்கள் தேவைப்படலாம். உயிர்த்தபின் இவை அனைத்தையும் இயேசு வழங்கினார் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக்குகிறது. வாய் வார்த்தைகளாலும், தன் உடலையே நிரூபணமாக அளித்ததாலும், தோமாவையும், ஏனையச் சீடர்களையும், அவர்கள் எழுப்பியிருந்த விரக்தி என்ற கல்லறையிலிருந்து வெளியே வருமாறு அழைத்தார், இயேசு.

சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு, இயேசு விடுத்த அழைப்பு: “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்… நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” (யோவான் 21: 27-29). இந்தச் அழைப்பை வித்தியாசமாக நினைத்துப் பார்க்க வேண்டுமெனில், இயேசு சீடர்களிடம், தோமாவிடம், நம்மிடம் சொல்வது இதுதான்: "அறிவை மட்டும் நம்பி, அனைத்திற்கும் நிரூபணம் தேடாதே. மனதை நம்பு, ஆன்மாவை நம்பு. என்னை நம்பு."

இயேசுவின் அழைப்பை ஏற்று, தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதில் தெளிவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் வழியே, அவர் மனதை, இயேசு, மிக ஆழமாகத் தொட்டார். எனவே மிக ஆழமானதொரு மறையுண்மையை தோமா கூறினார் - "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 20: 28). இயேசுவை, கடவுள் என்று கூறிய முதல் மனிதப்பிறவி தோமாதான். தன்னை இயேசு இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் உணர்ந்த அற்புத உண்மையை, உலகெங்கும், சிறப்பாக, இந்திய மண்ணிலும் பறைசாற்றினார், தோமா.

இறைவனின் பேரன்பும், இரக்கமும் எத்தனையோ அற்புதங்களை ஆற்றவல்லது. அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள் தானாகவே அடங்கும்; சந்தேக சுவர்களால் நாம் உருவாக்கிக்கொள்ளும் கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரை வழியாக இறைவனை மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.