2018-04-07 15:19:00

நோயுற்றோர், துன்புறுவோர் மீது அக்கறை காட்டுங்கள்


ஏப்.07,2018. நல்ல சமாரியர் போன்று, நோயுற்றோர் மற்றும் துன்புறுவோர் மீது அக்கறை காட்டுமாறு, இச்சனிக்கிழமையன்று அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக நலவாழ்வு நாள் கடைப்பிடிக்கப்பட்ட, ஏப்ரல் 7, இச்சனிக்கிழமையன்று இவ்வாறு தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், உலக நலவாழ்வு நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள, WHO எனப்படும் ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள்,  உலகில் அனைத்து மக்களுக்கும் தரமான நலவாழ்வு உதவிகள் கிடைப்பதற்கு உறுதி வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக நலவாழ்வு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட எழுபதாம் ஆண்டு, இவ்வாண்டில் சிறப்பிக்கப்படுவதைக் குறிப்பிட்டுள்ள Ghebreyesus அவர்கள், நலவாழ்வு, மனித உரிமையாகும் என்றும், ஏழ்மையினால், ஒருவர் தேவையான நலவாழ்வு வசதியைப் பெற முடியாது என்பதற்காக, அவர் நோயுறவோ அல்லது இறக்கவோ கூடாது எனக் கூறியுள்ளார்.

உலகில், ஏறத்தாழ பத்துக்கோடிப் பேர், ஒரு நாளைக்கு, 1.90 டாலருக்கு குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர் எனவும், நலவாழ்வு வசதிகள் வழங்கப்பட வேண்டியது அரசியல் சார்ந்த கடமை எனவும் கூறியுள்ளார், Ghebreyesus.

1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உலக நலவாழ்வு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.