2018-04-07 15:01:00

மெக்சிகோ எல்லைக்கு படைவீரர்களை அனுப்பும் திட்டத்திற்கு...


ஏப்.07,2018. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மெக்சிகோ எல்லைக்கு, ஏறத்தாழ நான்காயிரம் தேசிய பாதுகாப்பு படைவீரர்களை அனுப்பும், அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களின் திட்டத்திற்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் எட்டு ஆயர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் எல்லைப் பகுதியிலுள்ள, அமெரிக்க ஐக்கிய நாட்டின் எட்டு ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த எல்லைப்பகுதி, போர் இடம்பெறும் ஒரு பகுதி அல்ல என்றும், அமைதியாகவும், சட்டங்களை மதிப்பவர்களாகவும், துன்புறும் மனிதருக்கு, மனத்தாராளத்துடன் உதவுகின்றவர்களாகவும் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு நாட்டினர், தங்கள் பகுதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என்பதைத் தாங்கள் அறிந்திருக்கின்றோம், அதேநேரம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாதுகாப்பைத் தேடுகின்றவர்கள், வன்முறை மற்றும் சித்ரவதைகளுக்கு அஞ்சி, தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறுகின்றவர்கள் என்பதையும் நினைவுபடுத்துகின்றோம் எனவும் ஆயர்கள் கூறியுள்ளனர்.

புலம்பெயர்ந்தவர்களை மனிதமற்று நடத்த வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், அரசுத்தலைவரின் இத்தீர்மானம், அமெரிக்கர்களின் நல்லுணர்வுகளுக்கு முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் வரையில், ஏறத்தாழ நான்காயிரம் தேசிய பாதுகாப்பு படைவீரர்களை அனுப்புவதற்கு, அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

இத்தடுப்புச் சுவருக்கு மெக்சிகோ நாடும் நிதியுதவி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ள டிரம்ப் அவர்கள், இதற்குத் தேவையான ஏறத்தாழ 2,500 கோடி டாலர் இன்னும் கிடைக்காததால் இப்புதிய திட்டத்தை அவர் அறிவித்துள்ளார் எனவும் செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.