2018-04-09 16:32:00

பிரிவினையை உண்டாக்கும் சக்திகளிடம் சரணடைய வேண்டாம்


ஏப்.09,2018. ஒடிசா மாநிலத்தின், சுந்தர்கார் மாவட்டத்தில், கிறிஸ்து உயிர்ப்பு திருவிழிப்பு திருவழிபாட்டின்போது, சேதப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களை, இந்திய ஆயர்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று பார்வையிட்டு, இந்திய ஆயர் பேரவையின் சார்பில், அப்பகுதி கத்தோலிக்கருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளது.

இக்குழுவினரை வரவேற்ற அப்பகுதி கத்தோலிக்கரோடு சேர்ந்து செபித்த இக்குழு, இக்குற்றச் செயல்களைப் புரிந்தவர்களை மன்னிக்கவும், அவர்களின் மனமாற்றத்திற்காகச் செபிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏப்ரல் 07, இச்சனிக்கிழமையன்று, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள் தலைமையில், கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா, ரூர்கேலா ஆயர், கிஷோர் குமார் குஜூர் மற்றும், ஏனைய ஆயர்களும், சேதப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களைப் பார்வையிட்டனர்.

Salangabahal நகரிலுள்ள புனித தோமையார் ஆலயத்திற்கு முதலில் சென்ற அக்கழு, சேதப்படுத்தப்பட்ட அன்னை மரியா திருவுருவம் மற்றும் அந்த ஆலயத்தின் முன்புறக் கெபியில் தலைதுண்டிக்கப்பட்ட குழந்தை இயேசு திருவுருவத்தையும் பார்வையிட்டது. சேதப்படுத்தப்பட்ட ஏனைய ஆலயங்களையும் இக்குழு பார்வையிட்டது.

அச்சமயத்தில் கருத்து தெரிவித்த, ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள், அமைதியைக் குலைப்பதற்குத் திட்டமிட்டு ஆற்றப்பட்ட செயல் இது என்று கூறினார்.

மேலும், அறிக்கை ஒன்றை வெளிட்ட இந்த ஆயர்கள் பிரதிநிதிகள் குழு, சரியான நேரத்தில் காவல்துறை வந்து, அந்த மாவட்டத்தில் அனைத்து ஆலயங்களுக்கும் பாதுகாப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளது. அத்துடன், பிரிவினையை உண்டாக்கும் சக்திகளிடம் சரணடைய வேண்டாமெனவும், கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளது அக்குழு. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.