2018-04-10 14:29:00

இமயமாகும் இளமை - போதுமான அளவு பெறுவாயாக...


வெளிநாட்டிற்குச் செல்லும் இளம்பெண் ஒருவரை வழியனுப்ப அவரது தந்தை வந்திருந்தார். இருவரும் ஒருவர் ஒருவரை அணைத்து, பிரியாவிடை சொன்ன வேளையில், "போதுமான அளவு வாழ்த்துகிறேன்" (I wish you enough) என்று தந்தை சொன்னார். அருகிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றொருவர், இளம்பெண் சென்றபின், அந்த தந்தையிடம் அவர் கூறிய இறுதி வாழ்த்தின் பொருள் என்ன என்று கேட்டார்.

தந்தை அவரிடம், “இது எங்கள் குடும்ப பாரம்பரியம். தலைமுறை, தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் ஒருவர், ஒருவருக்கு பிரியாவிடை அளிக்கும்போது, 'போதுமான அளவு வாழ்த்துகிறேன்' என்று கூறி ஆசி வழங்குவோம். அதன் பொருள் இதுதான்:

மேகம் சூழ்ந்து, உனது நாள், சாம்பல் நிறமாக மாறும்போது, உன் மனதை ஒளிமயமாக வைத்திருக்க, போதுமான அளவு சூரிய ஒளி உனக்குள் வீச வாழ்த்துகிறேன்.

சூரியனை நீ இன்னும் அதிகமாக வியந்து போற்றுவதற்குப் போதுமான அளவு, மழை பொழிய வாழ்த்துகிறேன்.

உன் உள்ளத்தைத் துடிப்புடன் வைத்திருக்கப் போதுமான அளவு, மகிழ்வு, உனக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்.

வாழ்வில் வரும் சிறு, சிறு மகிழ்வுகளும் பெரிதாகத் தெரியும்படி, போதுமான வேதனை உன்னை வந்தடைய வாழ்த்துகிறேன்.

உன் தேவைகளை நிறைவு செய்யுமளவு, போதுமான வெற்றிகள் உனக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்.

உன்னிடம் உள்ளவற்றை இன்னும் அதிகமாய் பாராட்டுவதற்குப் போதுமான அளவு, உனக்கு இழப்புக்கள் உருவாக வாழ்த்துகிறேன்.

உன் இறுதி பிரியாவிடைக்கு நீ தகுந்த முறையில் தயாரிக்கப் போதுமான அளவு, நண்பர்கள் உனக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்.”

இளையோர், தங்கள் வாழ்வில் போதுமான நலன்களை, போதுமான அளவு பெற்று நிறைவடைய வாழ்த்துகிறோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.