சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 2

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் - RV

11/04/2018 11:12

ஏப்.11,2018. புனித அகுஸ்தீன், உரோமைப் பேரரசின் நுமிதியா மாநிலத்தில், தகாஸ்தெ(Thagaste) எனும் ஊரில், கி.பி.354ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி பிறந்தார். தகாஸ்தெ, தற்போதைய அல்ஜீரியா நாட்டிலுள்ள Souk Ahras என்ற நகரமாகும். புனித அகுஸ்தீன் அவர்களின் தாய் மோனிக்கா, பக்தியுள்ள கிறிஸ்தவர். இவரது தந்தை பெட்ரீசியுஸ், வேற்று மதத்தவர் மற்றும் குடும்பத்தின்மீது அக்கறையின்றி வாழ்ந்தவர். பெட்ரீசியுஸ், மரணப்படுக்கையில் கிறிஸ்தவத்திற்கு மாறியவர். அகுஸ்தீன், எப்போதும் தனது தாயையே மையப்படுத்தி வாழ்ந்து வந்தார். தந்தையை ஓர் அந்நியர் போலவே அவர் கருதினார். இவரின் குடும்பம், வட ஆப்ரிக்காவில், Berbers எனப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தது. ஆயினும் உரோமானிய பழக்கவழக்கத்தில் ஊறியிருந்த அவரது குடும்பத்தினர், கவுரவம் மற்றும் மாண்புக்காக, இலத்தீன் மொழியையே பேசினர். Aurelius என்ற குடும்பப் பெயரைக் கொண்டிருந்த இவரது குடும்பத்தில், இவரது தந்தையின் முன்னோர்கள், அடிமைகளாக இருந்து சுதந்திரம் அடைந்து, 212ம் ஆண்டின் Caracalla  ஒப்பந்தத்தின்படி, உரோமன் குடியுரிமையை முழுமையாய்ப் பெற்றவர்கள். இவர் தனது 11வது வயதில், Madaurus (தற்போதைய M'Daourouch) என்ற நகரில் படிப்பைத் தொடர்ந்தார். அக்காலத்தில்தான் அகுஸ்தீன் இலத்தீன் இலக்கியத்தைக் கற்றதுடன், உரோமையரின் சமய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளையும் தெரிந்துகொண்டார். மனித இயல்பு தன்னிலே பாவத்தை நாடுவது, இதற்காகத்தான் மனிதருக்கு கிறிஸ்துவின் அருள் தேவை என, இக்காலத்தில்தான் தான் உணர்ந்ததாக, "Confessions" என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார், அகுஸ்தீன்.

எனது மாணவப் பருவத்தில், நண்பர்களுடன் சேர்ந்து பழம் திருடினேன். அப்படிச் செய்தது, நான் பசியாய் இருந்ததற்காக அல்ல, ஆனால் திருடுவது அனுமதிக்கப்படவில்லை என்பதற்காகச் செய்தேன். நான் என் தவறுகளை அன்புகூர்ந்தேன். வெறுப்புத்தருகின்ற செயலை விரும்பினேன். இந்த அனுபவம், மனிதரின் திருந்திய வாழ்வுக்கு, இயேசுவின் அருள் எவ்வளவு அவசியம் என்பதை, பிற்காலத்தில் உணரச் செய்தது. இவ்வாறு எழுதியிருக்கும் புனித அகுஸ்தீன் அவர்கள்,  நண்பர் ரோமானியானுஸ் என்பவரின் உதவியால், தனது 17வது வயதில், கார்த்தேஜ் சென்று, பேச்சுக்கலை கல்வியைத் தொடர்ந்தார். இச்சமயத்தில்தான் இவர், சிசெரோ எழுதிய "ஹோர்த்தேன்சியுஸ்" (Hortensius இந்நூல் தற்போது இல்லை) என்னும் நூலைத் விரும்பி வாசித்தார். இது அவருடைய உள்ளத்தில் மெய்யியல் ஆர்வத்தைத் தூண்டி எழுப்பியதாகவும் அகுஸ்தீன் எழுதியிருக்கிறார். அன்னை மோனிக்கா, இவரை கிறிஸ்தவ நெறியில் வளர்த்திருந்தாலும், மனிக்கேயக் கொள்கையில் பற்றுகொண்டு அந்த மதத்தைப் பின்பற்றத் தொடங்கினார் இவர். இளைஞரான அகுஸ்தீன், கார்த்தேஜில் இளைஞர்களோடு சேர்ந்து, தவறான பாலியல் வாழ்வில் ஈடுபட்டார். இத்தகைய வாழ்வை நினைத்துத்தான் அவர், ஆண்டவரே, எனக்கு கற்பு மற்றும் சுயக்கட்டுப்பாட்டு வாழ்வை அருளும், இந்த வாழ்வு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என மன்றாடியுள்ளார். 

புனித அகுஸ்தீன் அவர்கள், கார்த்தேஜ் நகரில், தனது 17வது வயதில் ஓர் இளம்பெண்ணோடு நட்பை வளர்த்தார். இவரது அன்னை மோனிக்கா, இவர்களின் குடும்பத் தரத்திற்கு ஏற்ற பெண்ணை மணக்குமாறு கூறுகையில், இவர், 14 ஆண்டுகள் திருமணம் செய்யாமலேயே, அந்தப் பெண்ணோடு உறவைத் தொடர்ந்தார். அந்த உறவில், அவர்களுக்குப் பிறந்த ஆண் மகனுக்கு, Adeodatus (372 - 388), அதாவது கடவுள் தந்த கொடை எனப் பெயரிட்டார் அவர். அதேயோதாத்துசும், தன் தந்தையைப் போலவே சிறந்த அறிவாளியாக இருந்தார் என்று சொல்லப்படுகின்றது. கி.பி.373 மற்றும் 374ம் ஆண்டுகளில் தகாஸ்தே நகரில் இலக்கணம் கற்பித்தார் அகுஸ்தீன். அதற்கு அடுத்த ஆண்டு அவர் கார்த்தேஜுக்குச் சென்று, பேச்சுக் கலை கற்பிக்க பயிலகம் ஒன்றை உருவாக்கி ஒன்பது ஆண்டுகள் அங்கு கற்பித்தார். மாணவர்களின் ஒழுங்கின்மை கண்டு வெறுப்புற்று, அவர் 383ம் ஆண்டில் உரோமை நகருக்குச் சென்று கல்வி கற்பித்தார். அங்கு அவருடைய மனிக்கேய நண்பர்கள் வழியாக உரோமை நகரின் ஆளுநராகிய சிம்மாக்குஸ் என்பவரின் அறிமுகம் அகுஸ்தீனுக்குக் கிடைத்தது. அவருடைய ஆதரவால் அகுஸ்தீன் 384ம் ஆண்டில் மிலான் நகரில் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பது. அன்னை மோனிக்கா, தன் மகன் அகுஸ்தீனோடு மிலானுக்குச் சென்றிருந்தார்.

அகுஸ்தீன் அவர்கள், மனிக்கேய மதத்தைக் கைவிட்டுவிட்டு ஒரு சமயத்தையும் பின்பற்றாத நிலைக்குச் சென்றார். அதேநேரத்தில், புளோட்டினஸ் என்னும் மெய்யியலாளரின் கொள்கையிலிருந்து பிறந்த "புது-பிளேட்டனிசம்" (Neo-Platonism) என்னும் கொள்கை அவரைக் கவர்ந்தது. அது அவரில் ஆன்மீக ஆர்வத்தைத் தூண்டிய போதிலும், அவருடைய அன்னை மோனிக்கா தன் மகன் கிறித்தவ சமயத்தை ஏற்க மாட்டாரா என்ற ஏக்கத்தோடு இருந்தார். மிலானில் தன் மகனுக்குப் பொருத்தமான ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும் என அன்னை மோனிக்கா விரும்பினார். ஆனால் அகுஸ்தீன், தான் முதலில் அன்புகூர்ந்த பெண்ணை மறக்கவில்லை. எனவே வேறொரு பெண்ணை மணக்கத் தயங்கினார். பின்னர் மண ஒப்பந்தம் ஆனது. ஆனால் இந்த மணப்பெண் திருமண வயதுவரம்பை எட்டுவதற்காக இரு ஆண்டுகள் காத்திருந்தார் அவர். ஆனால் ஆண்டவராகிய இயேசு, இந்தக் காலத்தில்தான் புனித அகுஸ்தீன் அவர்கள் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். தன்  மகன் அகுஸ்தீன் மனமாற்றம் பெற்று கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என்று, அன்னை மோனிக்கா இரவும் பகலும் கண்ணீரோடு செபித்து வந்தார் என்று, புனித அகுஸ்தீன் அவர்கள், தனது "சுயவரலாற்று" நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

11/04/2018 11:12