2018-04-11 15:04:00

புத்தரின் பிறந்தநாளையொட்டி திருப்பீட அவையின் செய்தி


ஏப்.11,2018. ஊழலிலிருந்து விடுதலை பெற்ற ஒரு கலாச்சாரத்தை வளர்க்கும் தேவை, உலகெங்கும் எழுந்துள்ளது என்று, பல்சமய உரையாடல் திருப்பீட அவை வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

புத்தரின் பிறந்தநாளான, 'வேஸாக்' விழாவையொட்டி, உலகெங்கும் வாழும் புத்த மதத்தினருக்கு வாழ்த்துக்களைக் கூறி, இத்திருப்பீட அவை, இப்புதனன்று வெளியிட்ட செய்தி, "கிறிஸ்தவர்களும், புத்த  மதத்தினரும்: இணைந்து ஊழலைத் தடுத்தல், மற்றும் போராடுதல்" என்ற மையக்கருத்தில் அமைந்துள்ளது.

அரசுகள், அரசு சாரா அமைப்புக்கள், ஊடகங்கள் அனைத்தையும் ஊழல் ஊடுருவியிருக்கும் இன்றையச் சூழலில், இந்த நோயை எதிர்த்துப் போராடும் பொறுப்பு, மதத்தலைவர்களுக்கு உள்ளது என்று இச்செய்தி வலியுறுத்துகிறது.

"ஊழலுக்கு 'முடியாது' என்று சொல்லுங்கள்" என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு பிப்ரவரி மாதம், தன் செபக்கருத்தாக வெளியிட்டதைச் சுட்டிக்காட்டும் இச்செய்தி, அகந்தையிலிருந்து உருவாகும் ஊழலுக்கு ஒரே மாற்று, பணிவுடன் கூடிய சேவை என்று, திருத்தந்தை கூறியுள்ளதை நினைவுறுத்துகிறது.

"எனக்குத் தரப்படாததை எடுப்பதை நான் தவிர்ப்பேன் என்று உறுதி கூறுகிறேன்" என புத்தமதத்தின் இரண்டாம் கோட்பாடு கூறியுள்ளதை, இச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.

பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால், Jean-Louis Tauran, அவர்களும், செயலர், ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்களும், புத்தரின் பிறந்தநாளான வேஸாக் திருநாளின் செய்தியில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.