2018-04-11 15:23:00

மறைக்கல்வியுரை : நமக்கு புதிய வாழ்வைத் தருவது திருமுழுக்கு


ஏப்.11,2018. கடந்த சில வாரங்களாக, திருப்பலி குறித்த மறைக்கல்வித் தொடரை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த, இயேசு உயிர்ப்புப் பெருவிழாக் காலத்தில் திருமுழுக்கு குறித்த ஒரு புதிய தொடரை துவக்க உள்ளதாகக் கூறி, தன் மறைக்கல்வி உரையை ஆரம்பித்தார்.

இயேசு தம் சீடர்களை நோக்கி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்”, என்று கூறிய, மத்தேயு நற்செய்தி, பிரிவு 28ன் இறுதி வரிகள் முதலில் வாசிக்கப்பட்டன.

திருமுழுக்கு எனும் அருளடையாளம் வழியாகவே, பாவங்களுக்கான மன்னிப்பை நாம் பெறுவதுடன், கிறிஸ்துவில் ஒரு புதிய, முடிவற்ற வாழ்வுக்கு மீண்டும் பிறக்கிறோம். தூய ஆவியாரால் புனிதப்படுத்தப்பட்ட திருமுழுக்குத் தண்ணீரின் வழியாக நாம், இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் மீட்பளிக்கும் மறையுண்மையில் முழுமையாக மூழ்கி, தந்தையாம் இறைவனின் தத்துக் குழந்தைகளாக கிறிஸ்துவில் மாறுகிறோம். புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் சாயலில் புதுப்பிக்கப்பட்ட நாம், அவருடைய இறைத்தன்மையை நம் வாழ்வில் ஏற்று இவ்வுலகை மாற்றியமைக்கும் நோக்கில், இயேசுவின் உடலாகிய திருஅவையின் மறைப்பணியில் பங்குபெற அழைக்கப்படுகிறோம். ஏனைய அருளடையாளங்களின் வாயிலாக இருப்பது திருமுழுக்கு. வானகத்திலுள்ள நம் உண்மையான இல்லத்தை நாம் அடையும் நாள்வரை, இந்த அருளடையாளங்கள் வழியாகத்தான் நாம் அருளின் வாழ்வில் வளர்கிறோம். இறைவனுடன் ஒன்றிப்பில், விசுவாசப்பயணமாக இருக்கும் நம் கிறிஸ்தவ வாழ்வு, கிறிஸ்துவைப் பின்பற்றி வளர்வதற்கான நம் தினசரி முயற்சிகளினாலும், செபத்தாலும் பலப்படுத்தப்படுகிறது. திருமுழுக்கில் நாம் பெற்ற கொடை, பல வேளைகளில் முழுமையாக உணரப்படாமல் இருந்தாலும், இந்த பாஸ்கா காலத்தில் அக்கொடையை மேலும் முழுமையான விதத்தில், அதன் மதிப்பை பாராட்டி ஏற்க முன்வருவோமாக. திருமுழுக்கின்போது, கிறிஸ்துவில் நாம் பெற்ற புதிய வாழ்வை, மாறா உறுதியுடன் வாழவும் முன்வருவோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.