சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

பணத்திற்கு விலைபோகாத கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை

12/04/2018 15:28

ஏப்.12,2018. கிறிஸ்தவ மறையின் ஆரம்ப காலத்தில் கொல்லப்பட்ட மறைசாட்சிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், இன்று, கிறிஸ்தவர்கள் மிக அதிக அளவில் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

புனித வாரம், பாஸ்கா எண்கிழமை ஆகிய நிகழ்வுகளையொட்டி, கடந்த இரு வாரங்களுக்கு மேலாக, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இடம்பெறாத திருப்பலிகள் மீண்டும் துவங்கியதையடுத்து, இவ்வியாழனன்று இடம்பெற்றுள்ள திருத்தூதர் பணிகள் நூலின் பகுதியை மையப்படுத்தி, திருத்தந்தை மறையுரை வழங்கினார்.

கீழ்ப்படிதல், சாட்சியம் பகிர்தல், உறுதியுடன் வாழ்தல் ஆகிய மூன்று பண்புகள், உயிர்ப்பு மகிழ்விலிருந்து வெளிப்படுகின்றன என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இயேசுவின் உயிர்ப்பைத் தொடர்ந்த 50 நாள்கள், திருத்தூதர்களுக்கு மகிழ்வு நிறைந்த நாள்களாக இருந்தன என்று கூறினார்.

"மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்குக் கீழ்ப்படிவதை" பற்றி திருத்தூதர் பேதுரு கூறியுள்ள கூற்றை எடுத்துக்கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'மரணம் முடிய கீழ்ப்படிந்த' கிறிஸ்துவின் எடுத்துக்காட்டை, திருத்தூதர்கள் பின்பற்றினர் என்று கூறினார்.

இதற்கு மாறாக, கல்லறைக்குப் பின்னரும் தங்கள் கட்டுப்பாட்டைக் காட்ட விழைந்த தலைமைச் சங்க குருக்கள், பணத்தைக் கொடுத்து, உயிர்ப்பின் உண்மையை மறைக்கப் பார்த்தனர் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இறைவனின் தூண்டுதல்களுக்கு கீழ்ப்படிய விழைவோர், பணத்திற்கு விலைபோகாமல், தங்கள் உயிரைக் கொடுக்குமளவு சாட்சியம் பகர்ந்துள்ளனர் என்று தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, ஆப்ரிக்க கண்டத்திலும், மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும், முன்னெப்போதும் இல்லாத அளவு கிறிஸ்தவர்கள் மறைசாட்சிய வாழ்வு வாழ்கின்றனர் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

12/04/2018 15:28