2018-04-12 15:04:00

இமயமாகும் இளமை – பூமிக்கு குடை பிடிக்கும் மாணவர்கள்


2100ம் ஆண்டில், அதாவது இன்னும் 82 வருடங்களில், புவியின் வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும், அதன் விளைவாக கடலின் நீர்மட்டம் உயரும், கடுமையான வறட்சி, விளைச்சல் குறைவு, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற விளைவுகளை உலகம் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கின்றன உலகளாவிய ஆய்வு முடிவுகள். இந்நிலையில், புதுச்சேரியை அடுத்துள்ள பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களான, முகுந்தன், மகாவிஷ்னி, சுவேதா, பரணிதரணி, ஹரிணி ஆகியோர், புவியின் வெப்பத்தைக் குறைக்கக்கூடிய மரங்களைக் கண்டெடுக்கும் ஆய்வு திட்டத்தை மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மரங்களைக் கொண்டே பூமிக்கு குடை பிடிக்கலாம் என்ற உண்மையை, இம்மாணவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு திட்டம், கடந்த பிப்ரவரியில், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற 25வது தேசிய சிறார் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இம்மாநாட்டில், பதக்கங்களையும் வென்றுள்ளனர் இம்மாணவர்கள். ஆசிரியர் ஜான்சி லாவண்யா அவர்களின் வழிகாட்டுதலில், இவர்கள் இத்திட்டத்தை மேற்கொண்டனர். இத்திட்டம் குறித்து ஆசிரியர் ஜான்சி லாவண்யா அவர்கள், தி இந்து நாளிதழிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். “வளரும் தலைமுறைக்கு இந்த புவியை, அதன் இயற்கைத் தன்மை கெடாமல் பாதுகாக்க சொல்லித் தருவது அவசியமாகிறது. இதன்படி, புவியின் வெப்பத்தை பெருமளவு குறைக்கக்கூடிய மரங்களைக் கண்டெடுக்கும் ஆய்வை பனித்திட்டு கிராமத்தில் மேற்கொண்டோம். அதிக எண்ணிக்கையில் உள்ள மரங்கள் மற்றும் அதிக நிழல் தரும் மரங்களைத் தேர்வு செய்து, அந்த மரங்களின் கீழ் நிலத்தின் வெப்பநிலை மற்றும் காற்றின் வெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம் போன்றவற்றை பதிவு செய்தோம். இதேபோன்று திறந்தவெளியில் நிலத்தின் வெப்பம், காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றையும் பதிவு செய்து இரண்டையும் ஒப்பிட்டோம். எந்தெந்த மரங்கள், தாவரங்கள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் வாழ ஏற்ற சூழ்நிலையை அளித்திருக்கிறது என்பதை அறிய, flora (தாவர வாழ்வியல் சூழலை அறிவது) மற்றும் fauna (பூச்சியினங்கள் வாழ்வியல் சூழலை அறிவது) முறையில் இந்த ஆய்வை மேற்கொண்டோம். மேலும், காற்றிலுள்ள தூசுகளைச் சுத்தப்படுத்தும் திறனை அறிய Particulate Matter (PM) என்ற ஆய்வையும் செய்தோம். இந்த ஆய்வின் முடிவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, புவியின் வெப்பத்தை பெரிதும் குறைக்கக்கூடிய மரங்களாக ஆலமரம், அரச மரம், மா மரம், வேப்ப மரம், மகிழ மரம், பூவரச மரம் போன்றவை கண்டறியப்பட்டன. இந்த ஐந்து மாணவர்களும், இதுவரை 125க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இவர்களுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர் சிவசக்கரவர்த்தியும் இணைந்துள்ளார் என்றார் ஆசிரியர் ஜான்சி லாவண்யா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.