2018-04-12 15:44:00

விமான விபத்தில் இறந்தோருக்கு திருத்தந்தையின் அனுதாபம்


ஏப்.12,2018. அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜியர்ஸில் இப்புதன் காலை நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தோருக்கு தன் ஆழந்த இரங்கலை வெளிப்படுத்தும் தந்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

அல்ஜியர்ஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Paul Desfarges அவர்களுக்கு, திருத்தந்தையின் சார்பில் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இத்தந்தியில், உறவினரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருடனும், துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டிருப்போருடனும் திருத்தந்தை தன் நெருக்கத்தை வெளியிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11, புதனன்று காலை அல்ஜியர்ஸ் நகரின் Boufakir விமான நிலையத்திலிருந்து கிளம்பிய இராணுவ விமானம் ஒன்று, 30 கிலோ மீட்டர் தூரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியதில், 257 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், இராணுவத்தில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்றும், இந்த விபத்தின் காரணமாக அல்ஜீரியா நாட்டில் மூன்று நாள்கள் துக்கத்தை அரசு அறிவித்துள்ளது என்றும், ஊடகங்கள் கூறுகின்றன.

அல்ஜீரியா நாட்டில் கிறிஸ்தவ விசுவாசத்திற்கென கொல்லப்பட்டவர்களை அருளாளர்களாக உயர்த்தும் சடங்கை நிகழ்த்துவதற்கு, ஏப்ரல் 10, இச்செவ்வாயன்று, அல்ஜீரியா அரசு, தன் ஒப்புதலை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.