சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

கிறிஸ்து உண்மையான சுதந்திரத்தை அளிக்கின்றார்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரையாற்றுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

13/04/2018 15:07

ஏப்.13,2018. உண்மையான கிறிஸ்தவ சுதந்திரம் என்பது, நம் வாழ்வில் தெளிவான  மனத்துடன் கடவுளுக்கு இடம் ஒதுக்குவது மற்றும், இயேசுவைப் பின்செல்வதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலையில் மறையுரையாற்றினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலியில், கமாலியேல், திருத்தூதர்கள் பேதுரு மற்றும் யோவான், இயேசு ஆகியோரை, சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டுகளாகச் சொல்லி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் உயிர்ப்புக் காலத்தில் நாம் கேட்கும் சுதந்திரம், கடவுளின் பிள்ளைகளுக்குரிய சுதந்திரம் என்றும், இயேசு சிலுவையில் நிகழ்த்திய மீட்புச் செயல் வழியாக,  இச்சுதந்திரத்தை நமக்கு அருளுகின்றார் என்றும், திருத்தந்தை கூறினார்.

திருத்தூதர்கள் பேதுரு மற்றும் யோவான் பற்றி, கமாலியேல் என்னும் பரிசேயர், தலைமைச் சங்கத்தில் கூறியது, இவ்விரு திருத்தூதர்களும் தலைமைச் சங்கத்தில் கூறியது போன்றவை பற்றிக் கூறும் திருத்தூதர்கள் பணி நூல் பகுதி, அப்பங்களையும், மீன்களையும் இயேசு பலுகச் செய்த புதுமை பற்றிய யோவான் நற்செய்தி பகுதி ஆகிய இரு வாசகங்களை மையப்படுத்தி மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுதந்திரத்திற்கு முதல் எடுத்துக்காட்டாக, கமாலியேல் அவர்களை, இன்றைய முதல் வாசகம் நமக்கு அளிக்கின்றது எனவும், பரிசேயரும், சட்ட வல்லுனருமாகிய கமாலியேல், தன் பேச்சால், திருத்தூதர்கள் பேதுரு, யோவான் ஆகிய இருவரையும், தலைமைச் சங்கம் விடுதலை செய்யச் செய்தார் எனவும் கூறினார் திருத்தந்தை.

கமாலியேல் சுதந்திர மனிதராக இருந்தார் என்றும், ஏனையோரிடம் எடுத்துச்சொன்ன இவரின் சிந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும், சுதந்திரம், பொறுமையின்றி இருக்காது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சுதந்திர மனிதர், காலங்கள் பற்றி அஞ்சாமல், தன் வாழ்வில் கடவுளுக்கு இடம் கொடுத்து, அவர் செயல்படுவதற்குத் தன்னை கையளிக்கிறார் என்று கூறினார், திருத்தந்தை. இத்தகைய சுதந்திரம், இயேசு கிறிஸ்துவை அன்புகூரச் செய்யும் எனவும், இது, இயேசு கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசத்தால், தூய ஆவியாரால் முத்திரையிடப்படுகின்றது  எனவும் உரைத்த திருத்தந்தை, இந்த சுதந்திரத்துடன் இயேசு கிறிஸ்துவை அறிவித்ததால், இன்றும் பலர் சிறைகளில் உள்ளனர் மற்றும், ஏராளமான கிறிஸ்தவர்கள் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் கூறினார்.

திருத்தூதர்கள் பேதுரு, யோவான் ஆகிய இருவரும் சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டாய் உள்ளனர் என்றும், தலைமைச்சங்கம் இவர்களை விடுதலை செய்தாலும், குற்றமற்ற நிலையிலும், இவர்கள் அநீதியாய் தண்டிக்கப்பட்டார்கள் என்றும், இயேசுவுக்காகத் தாங்கள் தண்டனை பெறுவது குறித்து இவர்கள் மகிழ்வாய், தலைமைச் சங்கத்தைவிட்டு வெளியேறினார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

மூன்றாவது எடுத்துக்காட்டாய் இயேசுவே உள்ளார் என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, நான் சுதந்திர மனிதராக இருக்கின்றேனா, எனது சுதந்திரம், கிறிஸ்தவர் என்பதை வெளிப்படுத்துகின்றதா போன்ற கேள்விகளையும் எழுப்பினார்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

13/04/2018 15:07