2018-04-13 15:20:00

பூமியைப் பாதுகாக்க வேண்டியது அவசரத் தேவை


ஏப்.13,2018. மனிதரையும், சுற்றுச்சூழலையும் கடுமையாய்ப் பாதிக்கின்ற தனிமனிதக் கோட்பாட்டுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று, ஓசியானியத் திருஅவையிடம், கேட்டுக்கொண்டுள்ளார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

ஓசியானியா கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கூட்டமைப்பு, பாப்புவா நியூ கினி நாட்டின் Port Moresby நகரில், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது குறித்து நடத்திவரும் கூட்டத்தில், இவ்வியாழனன்று உரையாற்றிய, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

சுற்றுச்சூழல் மற்றும் வருங்காலத் தலைமுறைகள் மீது அக்கறை கொள்ளாமல், பொறுப்பற்ற முறையில் இடம்பெற்றுவரும் வளர்ச்சித் திட்டங்கள், தொழிற்சாலை நடவடிக்கைகள், நிலங்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படல் போன்றவை ஏற்படுத்தும் பேரழிவுகளைக் கோடிட்டுக் காட்டினார், கர்தினால் பரோலின்.

கடவுளின் படைப்பு எனும் கொடை மீதுள்ள தவறான கண்ணோட்டங்களில், தீவிர மாற்றங்கள், குறிப்பாக, அரசியல் தலைவர்களிடையே அவசியம் என்றும் வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், ஒவ்வொரு மனிதரும் பொறுப்புள்ள விதத்தில் தங்களின் வாழ்க்கைமுறையை அமைக்குமாறும் பரிந்துரைத்தார்.

உலகளாவிய புறக்கணிப்புக் கலாச்சாரத்தை மாற்றியமைப்பதற்கு ஓசியானியா ஆயர்கள் முயற்சிக்குமாறும் கேட்டுக்கொண்ட திருப்பீடச் செயலர், ஒவ்வொரு மனிதருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொறுப்பு உள்ளது என்பதை நினைவுபடுத்தினார்.

"ஓசியானியா பகுதியின் பொதுவான இல்லம் : கடலைப்போல பரந்துள்ள வாய்ப்புக்கள்" என்ற தலைப்பில், ஏப்ரல் 11 இப்புதனன்று தொடங்கியுள்ள இக்கூட்டம், ஏப்ரல் 18, வருகிற புதனன்று நிறைவடையும். இக்கூட்டத்தில், ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து, பசிபிக் தீவுகள், பாப்புவா நியூ கினி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 75 ஆயர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.