2018-04-14 14:33:00

வில்லனோவா பல்கலைக்கழகப் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை


ஏப்.14,2018. நம் மனிதக் குடும்பத்தின் ஒன்றிப்புக்கு, உலகளாவிய கத்தோலிக்க கண்ணோட்டத்தை வழங்க வேண்டியது, கல்வி நிறுவனங்களின் உடனடிப் பணியாக உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு கத்தோலிக்க பல்கலைக்கழகப் பிரதிநிதிகளிடம் கூறினார்.   

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்ஃபியாவிலுள்ள வில்லனோவா பல்கலைக்கழகத்தின் ஏறத்தாழ எழுபது பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் தெளிவாகத் தெரிகின்ற, கடும் சமத்துவமின்மைகள் மற்றும் அநீதிகளைக் களைவதற்குத் தேவைப்படும் நடைமுறை ஒருமைப்பாட்டுணர்வுக்கு, கல்வி நிறுவனங்கள், தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கூறினார்.

சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் உண்மை, நீதி மற்றும் மனித மாண்புக்கு ஆற்றும்  பணியில், கலந்துரையாடல் மற்றும் சந்திப்புப் பயிற்சிக்களங்களாகச் செயல்பட, பல்கலைக்கழகங்கள், இயல்பிலேயே அழைக்கப்பட்டுள்ளன, இது கத்தோலிக்க நிறுவனங்களுக்கு முற்றிலும் பொருந்தும் என்றும், இப்பிரதிநிதிகளிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித அகுஸ்தீன் சபையினர் நடத்தும் இந்த வில்லனோவா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, வாழ்வின் உண்மையான பொருளைத் தேடிய இளம் அகுஸ்தீனார் போன்று, இப்பல்கலைக்கழகமும், கத்தோலிக்க மரபின் வளமையைக் காத்து, அதைப் புதிய தலைமுறை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது என்று பாராட்டினார்.

வில்லனோவா பல்கலைக்கழகம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள மிகப்பழமையான கத்தோலிக்க பல்கலைக்கழகமாகும். இதனை புனித அகுஸ்தீன் சபையினர், 1842ம் ஆண்டில் உருவாக்கினர். இப்பல்கலைக்கழகத்தில், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.