சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை – பார்வைக் குறைவை திறமையாக மாற்றியவர்

இந்தியாவின் ஜூடோ சாம்பியன் மனோகரன் - RV

16/04/2018 14:07

“எனக்கு 85 விழுக்காடு பார்வை தெரியாது. இதனால், சிறு வயதிலிருந்தே நான் சந்தித்தது கேலியும் அவமானங்களும்தான். எங்கள் பகுதியில் என்னை `புட்டிக்கண்ணா’ என்றுதான் கூப்பிடுவார்கள். இந்தச் சமூகத்தின் மீது எனக்கு இருந்த கோபம்தான், என் திறமையாக வெளிப்பட்டது என நம்புகிறேன். அதனால்தான் சண்டைபோடுகிற இந்த விளையாட்டை அவ்வளவு வெறியோடு கற்றுக்கொண்டேன்...” என்று சொல்லியிருப்பவர், 28 வயது இளைஞர் மனோகரன். தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியைச் சேர்ந்த இவர், இந்தியாவின் ஜூடோ சாம்பியன். 2016ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர். `கராத்தே’ எனும் தற்காப்புக் கலையை ஐந்து வருடங்களாகப் பயின்ற இவர், பிளாக் பெல்ட் உட்பட அனைத்தும் வாங்கிய பிறகு, தன் பயிற்சியாளரின் அறிவுரைப்படி, 2010ம் ஆண்டு முதல் ஜூடோ கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். தீவிரப் பயிற்சியாலும் தன்னம்பிக்கையாலும் `விழி சவால் கொண்டவர்’ பிரிவில், 2012ம் ஆண்டிலிருந்து கலந்துகொள்ள ஆரம்பித்து பதக்கங்களை வாரிக் குவித்து வருகிறார். தான் மட்டுமன்றி, தன்னைப்போலவே தன் கிராமத்துச் சிறுவர்களும் சாதனை படைக்க வேண்டும் என,  தொடர்ந்து முப்பது சிறுவர்களுக்கும்மேல் ஜூடோ பயிற்சி கொடுத்து வருகிறார் மனோகரன். அவரின் மாணவர்கள், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் ஜூடோவில் பதக்கங்களை வென்று வருகிறார்கள். ஆசிய மாற்றுத்திறனாளர் விளையாட்டு போட்டியில் வென்ற பரிசுத்தொகையான பத்து இலட்சம் ரூபாயில், தன் தங்கையின் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் இவர். மனோகரன் அவர்கள், ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், “ஒலிம்பிக் விளையாட்டில் கலந்துகொண்டு, இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் வாங்கித்தர வேண்டும் என்பதுதான் என் இலட்சியம். அதற்குப் பயிற்சிக்குச் செல்ல எனக்கு வசதியில்லை. இருந்தபோதிலும், இருக்கின்ற வசதியை வைத்து, மேட் இல்லாமல் வீட்டுப்பக்கத்திலேயே பயிற்சி செய்து வருகிறேன். பார்வை எனக்குப் பிரச்சனையில்லை. நிச்சயமாக, இன்னும் பெரிதாகச் ஜெயிப்பேன்” என்று உற்சாகமாய்ச் சொல்லியிருக்கிறார். ஜூடோ சாம்பியன் மனோகரன் அவர்களின் கனவு மெய்ப்படட்டும்!

ஆதாரம்  :  வத்திக்கான் வானொலி

16/04/2018 14:07