சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ சமூக ஆய்வு

வாரம் ஓர் அலசல் – மனித உடல், கடவுளின் விலைமதிப்பற்ற கொடை

திருத்தந்தையின் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கலந்துகொண்ட மக்கள்

16/04/2018 14:16

ஏப்.16,2018. விண்ணுலகையும் மண்ணுலகையும், அவற்றில் வாழ்வன அனைத்தையும் படைத்த கடவுள், இறுதியில் தம் உருவிலும், சாயலிலும் மானிடரைப் படைத்தார். அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்(தொ.நூ.1,27). தம் படைப்புக்களைப் பார்த்து நல்லது என மகிழ்ந்த கடவுள், மானிடரைப் படைத்தபின், தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கியபோது அவை மிகவும் நன்றாய் இருந்ததைக் (தொ.நூ.1,31) கண்டார் என்று திருவிவிலியம் சொல்கிறது. மனிதர் கடவுளின் உயிர்மூச்சால் படைக்கப்பட்டவர்கள். எனவே அந்த உயிரை எடுத்துக்கொள்ள கடவுள் ஒருவருக்கே உரிமை உள்ளது. கடவுள் உருவில் படைக்கப்பட்ட மானிடரின் உடல், பல அதிசயங்களைக் கொண்டிருக்கின்றது. மனித உடலிலுள்ள தசைகளின் எண்ணிக்கை 639. மனித மூளையிலுள்ள மொத்த நரம்பு செல்கள் 1,200 கோடி. மூளையிலுள்ள நியுரான்களின் எண்ணிக்கை 1,400 கோடி. மனிதர் ஒரு வார்த்தை பேசும்போது முகத்தில் 72 தசைகள் அசைகின்றன. மனிதர் இறந்து மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நிற்கின்றது. மனிதர் தூங்கிக்கொண்டிருக்கும் போது, அவருடைய உயரம் 8 மி.மீ. அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருக்கும். இதற்கு காரணம், மனிதர் உட்காரும்போது, அல்லது நிற்கும்போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்... இவ்வாறு மனித உடலின் அதிசயங்களை அறியும்போது அவை நம்மை வியக்க வைக்கின்றது.

ஆனால் மனித உடலும், அதன் உறுப்புகளும், இக்காலத்தில் சந்தைப் பொருள்களாக மாறிவிட்டன. ‘நல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான், ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன்’ என்கிறார் “The Red Market” நூலின் ஆசிரியர் Scott Carney. அமெரிக்கக் குடிமகனான இவர், இந்தியா போன்ற நாடுகளில் வாழ்ந்தால், அதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக்கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை, அவர் எழுதியுள்ள நூலில் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். உலக அளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய தேவைப்படும் மாற்று உறுப்புகள்தான், இக்கால விற்பனைப் பொருள்கள். இவை, உலகச் சந்தையில் பல கோடிகள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும், குறிப்பாக, ஏழை நாடுகளில் வாழும் மக்களை ஏமாற்றி, அவர்களின் உடல் பாகங்கள் திருடப்படுதல், அவற்றின் விற்பனை, அந்த வர்த்தகத்தில் மோசடி போன்றவை அமோகமாக இடம்பெற்று வருகின்றன. பல பணக்கார நாடுகளுக்குத் தேவைப்படும் இரத்தம், எலும்பு, தசை, சிறுநீரகம், கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி போன்ற அனைத்தையும் ஈடுசெய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள்தான்.

இந்தியாவில் ஒரு கோவிலில் பக்தர்களின் காணிக்கைத் தலைமுடிகள், அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதியாகின்றதாம். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள், முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால், ’தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்’ என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி, பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது. அப்துல் ரஹூம் என்ற ஆப்கானிஸ்தான் படைவீரர் போரில் இரு கைகளையும் இழந்தவர். அவருக்கு கேரளாவைச் சேர்ந்த, மூளைச்சாவால் துன்புற்ற, ஜோசப் என்பவரின் இரு கைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை, கேரளாவின் Amrita  மருத்துவமனையில், வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கின்றார் மருத்துவர் சுப்ரமணியன் அய்யர். மூளைச்சாவால் இறந்த ஜோசப் அவர்களின் மனைவி மற்றும் மகளிடம், இந்த மருத்துவர், கைகள் பொருத்தப்பட்ட அப்துல் ரஹூமைக் காட்டும் காணொளியைப் பார்த்தபோது, இந்தியாவில் மத நல்லிணக்கமும் மனிதாபிமானமும் சாகவில்லை என்று மகிழச் செய்தது.

இந்நாள்களில் தமிழகத்தில் தண்ணீருக்காகவும், சுற்றுச்சூழல் பாதிப்பற்ற நலவாழ்வுக்காகவும் மக்கள் போராடி வருகின்றனர். அத்துடன், ஜம்முவில் எட்டு வயது சிறுமி Asifa Banoவுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை அறிந்து தமிழகம் உட்பட, இந்தியாவின் பல இடங்களில், பரவலாக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீரின் கத்துவாவில் கடந்த சனவரி 10ம் தேதியிலிருந்து காணாமல்போன, ஏழைச் சிறுமி ஆசிஃபா, ஏழு நாள்கள் கூட்டு வன்செயலுக்கு உள்ளாகியுள்ளார். அதுவும், கோவிலுக்குள், அர்ச்சகர், அதிகாரிகள் உட்பட இந்தக் கொடுமையைச் செய்து, அந்தச் சிறுமியின் உடலைச் சிதைத்துள்ளனர். நாட்டையே உலுக்கிவிட்டுள்ள இந்தச் சோகம் மறைவதற்குள், குஜராத் மாநிலம், சூரத் நகரி்ல் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சிறுமியின் உடலில் 86க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்தன. கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளம் இருந்தது. அச்சிறுமி எட்டு நாள்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, காவல்துறை இஞ்ஞாயிறன்று தெரிவித்துள்ளது. காஷ்மீரின் கத்துவா, உத்தர பிரதேசத்தின் உன்னாவ் ஆகிய இடங்களில் நடந்த பாலியல் கொடுமைகள் நாட்டின் இதயத்தையே கிழிப்பதாக உள்ளன.

இந்தியாவில் சிறுமிகள் முதல், வயது முதிர்ந்த பெண்கள் வரை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவது அன்றாடச் செய்தியாக மாறிவருவது கசப்பான உண்மை. கடவுளது படைப்பின் சிகரமாகிய மனிதரின் உடல், குறிப்பாக பெண்களின் உடல் எப்படி மதிக்கப்படுகின்றது! சிரியாவில் இடம்பெற்றுவரும் சண்டையில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ அப்பாவி மனித உடல்கள் சிதைக்கப்படுகின்றன, உயிர்கள் அழிக்கப்படுகின்றன. சிரியாவில் வேதியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, வல்லமை படைத்த மூன்று நாடுகள் ஐ.நா. உத்தரவின்றி, பதில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி, அவற்றை  நியாயப்படுத்தியும் உள்ளன. ஏனையக் கோளங்களைக் கண்டறிவதற்கு, கோடிக்கணக்கான டாலர்களைச் செலவழிக்கும் நாடுகள், இந்தப் பூமிக்கோளத்தில் மனித உயிர்களை அழிப்பதற்கும் கோடிக்கணக்கான டாலர்களைச் செலவழிக்கின்றன. என்ன அவலம் இது! டாக்டர் அம்பேத்கார் சொன்னார் - தன்னை உயர்ந்த சாதியாகவும், இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி என்று. இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின், சிரியாவில் அமைதியைக் கொண்டுவர உலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். சிரியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் அமைதி நிலவுவதற்காக, தான் தொடர்ந்து செபிப்பதாகவும், நன்மனம் கொண்ட எல்லாரும் தொடர்ந்து செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. மேலும், இங்கிலாந்தில், 23 மாதக் குழந்தை Alfie Evans, அவனின் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவர்கள் மற்றும் ஏனைய நலப்பணியாளர்களின் ஒப்புதலோடு, அவனின் நிலைமைக்கேற்ப கவனிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. மனித வாழ்வுக்கு மிகுந்த மதிப்பு கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள திருத்தந்தை இஞ்ஞாயிறின் நற்செய்தியை (லூக்.24,35-48) மையமாக வைத்து, அல்லேலூயா வாழ்த்தொலி உரையாற்றுகையில், வாழ்வு மற்றும், மனித உடலின் மதிப்பு பற்றிப் பேசினார்.

இயேசு தம் உயிர்ப்பை உண்மை என நிரூபிப்பதற்காக, காயமடைந்த தன் கரங்களையும், கால்களையும் சீடர்களிடம் காண்பித்து, அவர்களோடு உணவருந்தினார். தாம் ஓர் ஆவியல்ல, உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதர் என்பதை உறுதி செய்தார் இயேசு. இவர், தம் உயிர்ப்பு குறித்து வலியுறுத்துவது, உடல் பற்றிய கிறிஸ்தவக் கண்ணோட்டத்தை வெளிச்சம்போட்டு காண்பிக்கின்றது. மனித உடல், கடவுளின் விலமதிப்பற்ற கொடை. உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதர், கடவுளின் உருவையும், சாயலையும் முழுமையாக வெளிப்படுத்துகின்றார். எனவே நாம் அனைவரும் நம் உடல் மற்றும், மற்றவரின் உடல்கள் மீது மிகுந்த மரியாதை வைத்து அவற்றைப் பராமரிக்க வேண்டும். நம் அயலவரின் உடலுக்கு நாம் விளைவிக்கும் தீமை, அந்த உடலில் ஏற்படுத்தும் காயம் அல்லது வன்முறை, படைத்தவராம் இறைவனையே அவமதிப்பதாகும். உடல்ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவரும், சிறார், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களை சிறப்பாக நினைத்துப் பார்க்கின்றேன். இவர்களின் சதையில் கிறிஸ்துவின் உடலைக் காண்கின்றோம். கேலிசெய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்ட இயேசு, அன்பை நமக்குக் கற்றுக்கொடுத்தார். நம் காலத்தில் தங்கள் உடல்களில் அடிமைநிலையை அனுபவிக்கும் மக்கள் எல்லாரையும் இயேசு விடுவிக்க விரும்புகின்றார். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதுபோன்று, மனித உடல் கடவுள் நமக்கு வழங்கியுள்ள விலைமதிப்பில்லா கொடை. மனித உடல் கடவுள் வாழும் இல்லம். எனவே நம் உடல் மற்றும், பிறரின் உடல்கள் மீது மிகுந்த மரியாதை வைத்து அவற்றை நன்முறையில் நடத்துவோம். கடவுள், உனக்குள், உன் உடலில் மூச்சாக இருக்கிறார். எனவே, இறைவன் உறைந்துள்ள உன் உடலை நீ பேணிப் பாதுகாத்து வா என்பதே சித்தர்களின் கட்டளை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

16/04/2018 14:16