2018-04-16 16:16:00

வாழ்வு, மற்றும், மனித உடலின் மதிப்பைக் கண்டுகொள்வோம்


ஏப்.,16,2018. இயேசு தம் உயிர்ப்பை உண்மை என நிரூபிப்பதற்காக, காயமடைந்த தன் கரங்களையும், கால்களையும் சீடர்களிடம் காண்பித்து, அவர்களோடு உணவருந்தி, தாம் ஓர் ஆவியல்ல, உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதர் என்பதை உறுதி செய்தார், என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறின் நற்செய்தியை (லூக்.24,35-48) மையமாக வைத்து, அல்லேலூயா வாழ்த்தொலி உரையாற்றிய திருத்தந்தை, இயேசு, தம் உயிர்ப்பு குறித்து வலியுறுத்துவது, உடல் பற்றிய கிறிஸ்தவக் கண்ணோட்டத்தை வெளிச்சம்போட்டு காண்பிக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி, வாழ்வு மற்றும், மனித உடலின் மதிப்பு பற்றிப் பேசினார்.

உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதர், கடவுளின் உருவையும், சாயலையும் முழுமையாக வெளிப்படுத்துகின்றார் என்பதால், நாம் அனைவரும் நம் உடல் மற்றும், மற்றவரின் உடல்கள் மீது மிகுந்த மரியாதை வைத்து அவற்றைப் பராமரிக்க வேண்டும், எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

உடல்ரீதியாகப் பயன்படுத்தப்படும், சிறார், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களை சிறப்பாக நினைத்துப் பார்க்கிறேன், இவர்களின் சதையில் கிறிஸ்துவின் உடலைக் காண்கின்றோம், என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அயலவரின் உடலுக்கு நாம் விளைவிக்கும் தீமை, அந்த உடலில் ஏற்படுத்தும் காயம் அல்லது வன்முறை, படைத்தவராம் இறைவனையே அவமதிப்பதாகும், என மேலும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.