2018-04-16 16:02:00

விளைவுகளால் பாதிப்படையாமல் இயேசுவின் பின்னால்


ஏப்.16,2018. இயேசுவை நாம் பின்பற்றுவது, ஆர்வக்கோளாறினால் அல்ல, மாறாக, அவர் மீது நாம் கொண்டுள்ள விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என இத்திங்கள் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, இயேசு நம் வாழ்வில் ஆற்றியது என்ன எனவும்,  அந்த அன்புக்கு நாம் எவ்விதம் பதில்மொழி வழங்குகிறோம் எனவும் நமக்குள் கேள்வி எழுப்பவேண்டும் என்றார்.

இயேசு அப்பம் பலுகச்செய்த புதுமையைக் கண்ட மக்கள், அவரை அரசராக்க முயன்றதைப்பற்றிக் கூறும் இத்திங்களின் நற்செய்தியை மேற்கோள்காட்டி மறையுரையாற்றிய திருத்தந்தை, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு நம்பியதாலா, அல்லது அவரின் புதுமையைக் கண்ட ஆர்வத்தாலா மக்கள் அவரை அரசராக ஏற்க முன்வந்தனர் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

அழிந்து போகும் உணவினால் அல்ல, நம்மை வாழவைக்கும் இறைவார்த்தைகளால், நாம் கவரப்படவேண்டும் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீய ஆவிகளை பன்றிகள்மீது செல்ல அனுமதித்து, அதன் உரிமையாளர்களுக்கு நட்டத்தை இயேசு ஏற்படுத்தியபோது, தங்களை விட்டு அவர் விலகிச் செல்லவேண்டும் என அவர்கள் கேட்டதையும், குணமாக்கப்பட்ட 10 தொழு நோயாளிகளுள் ஒருவர் மட்டுமே நன்றிசொல்ல வந்ததையும் உதாரணமாகக் காட்டினார்.

இயேசுவைப் பின்பற்றுவதால் வரும் எவ்வித விளைவுகள் குறித்தும் கவலைப்படாமல், அவரைப் பின்பற்றுவதில், நாம் திருத்தூதர் பணி நூலில் காணும் ஸ்தேவான் போல் செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.