2018-04-17 16:15:00

பொறுப்புணர்வுடன் கூடிய அணுகுமுறைகள் பலன்மிக்கவை


ஏப்.17,2018. மக்கள்தொகைப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சி, தொழில் நுட்ப முன்னேற்றம், பனிப்பாறை உருகுதல் போன்றவற்றால், ஒவ்வொரு நாடும் தங்கள் எல்லைத் தாண்டிய கடல் பகுதிகள் குறித்து பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என  ஐ.நா. அவைக் கூட்டத்தில் பேசினார், திருப்பீட உயர் அதிகாரி, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில், தங்கள் எல்லைகளையும் தாண்டிய பகுதியை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் ஒன்றிணைந்து பொறுப்பேற்க வேண்டும் என்ற மையக்கருத்துடன் ஐ.நா.வில் இடம்பெற்றக் கூட்டத்தில் ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் அவுசா அவர்கள்  உரையாற்றுகையில், மனிதகுலத் தேவைகள், பலவேளைகளில், வளர்ச்சியை பாதிக்கின்றன என்பதால், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் நம்முடைய பொருளாதாரத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

தற்போதையத் தலைமுறைகளும், வருங்காலத் தலைமுறைகளும் பயன்பெறும் நோக்கத்தில் இயற்கை பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, பொருளாதார முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த பேராயர் அவுசா அவர்கள், இயற்கையைப் பாதுகாப்பது, பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவது என்ற இரு நோக்கங்களும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டியவை என்று தன் உரையில் கூறினார்.

மக்களனைவருக்கும் உரித்தான பாரம்பரியச் சொத்துக்களைப் பயன்படுத்தும்போது, உரிமைகளைவிட கடமைகளே முக்கியத்துவம் பெறவேண்டும் என்று கூறியப் பேராயர், தங்கள் எல்லைக்கு அப்பாற்பட்ட பொதுக்கடலை பயன்படுத்தும் நாடுகளும், நிறுவனங்களும், தங்களிடம் எதிர்பார்க்கப்படும் பொறுப்புணர்வுகளுக்கு இயைந்தவகையில் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

பொருளாதார, சமூக, தொழில்நுட்ப, மற்றும், சுற்றுச்சூழல் கடமைகளையும், பொறுப்புணர்வுடன் கூடிய அணுகுமுறைகள் உள்ளடக்கியுள்ளதால், அதனால் கிட்டும் பலன்கள் சிறப்பானதாக இருக்கும் என்ற கருத்தையும் வலியுறுத்தினார், பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.