சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : ஹிப்போ புனித அகுஸ்தீன் பாகம் 3

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் - RV

18/04/2018 14:14

ஏப்.18,2018. “கடவுளை அறிவதற்காக சிலர் நூல்களை வாசிக்கின்றனர். ஆனால் கடவுளை அறிவதற்கு மாபெரும் நூல் ஒன்று உள்ளது. அதுவே கடவுளின் படைப்புயிர்கள். அவை, உங்களுக்கு மேலேயும், கீழேயும் உள்ளன. அவற்றை வாசியுங்கள். நீங்கள் அறிய விரும்பும் கடவுள், அந்த நூலை ஒருபோதும் மையால் எழுதவில்லை. மாறாக, அவர் தாம்  படைத்தவற்றை உங்கள் கண்முன்னால் வைத்துள்ளார். இதைவிட உரத்த குரலை உங்களால் கேட்க முடியுமா?” இவ்வாறு சொன்னவர், ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன். கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரிய மனமாற்றம் பெற்றவர்களில் ஒருவர் புனித அகுஸ்தீன். இவர், மாபெரும் மெய்யியலாளர் மற்றும் இறையியலாளர். திருமணமாகமலே ஒரு மகனுக்குத் தந்தையானவர் இவர். அகுஸ்தீன் அவர்களின் இளமைகால வாழ்வு, இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைவிடுத்து, எப்படியும் வாழலாம் என்று இருந்தது. அவரின் இளமைகால வாழ்வு, வாழ்வின் அடிப்படைக் கேள்விகளுக்குப் பொருள் தேடுவதாய் அமைந்திருந்தது. இவர் ஒன்பது ஆண்டுகள் மனிக்கேய கொள்கையாளர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் அவர் தேடிவந்த வாழ்வு பற்றிய கேள்விகளுக்கு, மனிக்கேயக் கொள்கைகள் திருப்தியான பதில்களைத் தரவில்லை என்பதை உணர்ந்தார்.   

உரோம் நகரில் மிகச் சிறந்த மற்றும் அறிவுமிக்க பேச்சுக்கலை ஆசிரியர்கள் உள்ளனர் என்பதைக் கேள்விப்பட்டு, கார்த்தேஜ் நகரிலிருந்து, 383ம் ஆண்டில் உரோம் வந்தார் அகுஸ்தீன். ஆனால் உரோம் நகரில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அடுத்த ஆண்டில்,  அவரின் மனிக்கேய நண்பர்கள் வழியாக, மிலான் நகரில் பேச்சுக்கலை பற்றிய ஆசிரியப் பணியைத் தொடங்கினார் அவர். அச்சமயத்தில், புனித அம்புரோஸ் அவர்கள், மிலான் நகரின் ஆயராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். புனித அம்புரோஸ் அவர்களின் சொல்லாற்றல் பற்றிக் கேள்விப்பட்ட புனித அகுஸ்தீன், ஆர்வ மிகுதியால், அவரின் மறையுரைகளைக் கேட்பதற்காக ஒருநாள் சென்றார். ஆனால், ஆயர் அம்புரோஸ் அவர்களின் மறையுரை, விவிலியம் மற்றும் கிறிஸ்தவ விசுவாசம் பற்றிய புதிய புரிதலை அகுஸ்தீனாருக்கு அளித்தது. 386ம் ஆண்டில் ஒருநாள், அகுஸ்தீன், தன் நண்பர் Alypiusயுடன் நாளைச் செலவழித்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் வெளியே, எடுத்து வாசி, எடுத்து வாசி என, ஒரு குழந்தை பாடுவதைக் கேட்டார் அகுஸ்தீன். இது சிறாரின் விளையாட்டில் ஒரு பகுதி என முதலில் உணர்ந்த அகுஸ்தீன், அது தொடர்ந்து கேட்டவுடன், இது விவிலியத்தை எடுத்து வாசிப்பதற்கு, கடவுளின் கட்டளை என உணர்ந்தார். பின் விவிலியத்தை எடுத்து வாசித்தார். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடல் 13ம் பிரிவு, 13,14 ஆகிய திருச்சொற்கள் இவர் கண்களில் பட்டன. அவற்றை வாசித்தபோது, தன் இதயம் ஒளியால் நிறைந்திருப்பதை உணர்ந்தார். அதற்குப் பிறகு, தன் தவறான அறநெறி வாழ்விலிருந்து முழுமையாய் மாறினார். 387ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கிறிஸ்து உயிர்ப்பு திருவிழிப்பு திருவழிபாட்டில், ஆயர் அம்புரோஸ் அவர்களிடம் திருமுழுக்குப் பெற்றார். அச்சமயத்தில் அவரது நண்பர் ஆல்பியுசும், மகன் அதேயோதாத்துசும் திருமுழுக்குப் பெற்றனர். இந்த மனமாற்ற அனுபவம் பற்றி தியானிக்கையில், ஆண்டவரே, எம்மை உமக்காகப் படைத்திருக்கிறீர், உம்மில் ஓய்வு அடையும்வரை எம் இதயங்கள் அமைதி அடைவதில்லை என எழுதியுள்ளார் புனித அகுஸ்தீன்.

மிலானில் திருமுழுக்குப் பெற்ற பின்னர், கிறிஸ்தவத் திருஅவையில், ஆன்மீகம் மற்றும் இறையியலில், மிகவும் சக்திமிக்க நல்தாக்கத்தை ஏற்படுத்தியவராக மாறினார், அகுஸ்தீன். இவரது மனமாற்றம் பற்றி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2008ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி, புதன் பொது மறைக்கல்வியில் உரையாற்றினார். மனமாற்றம் என்பது, வாழ்நாள் முழுவதும் நீடிப்பது மற்றும், கிறிஸ்துவைச் சந்திப்பதாகும், இது மனித இதயத்தின் அமைதியின்மைக்கு ஒரே பதில் என்பதை, மாபெரும் மனமாற்றம் அடைந்தவரான அகுஸ்தீன் கற்றுக்கொண்டார். இப்புனிதரின் மனமாற்ற அனுபவங்களை விவரிக்கும், அவரின் Confessions என்ற நூலுக்கு நன்றி சொல்வோம். கடவுளைப் புகழ்வதற்காக எழுதப்பட்ட அவரின் சுயவரலாறு அல்லது அவர் தன்னைப்பற்றி வெளிப்படுத்திய இந்நூல், மேற்குலகில் இலக்கிய வடிவத்தில் அமைந்துள்ள மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நூல்களில் ஒன்றாகும். மிகச்சிறந்த மற்றும் கவர்ச்சியூட்டும் இந்நூலை வாசிக்கும் எவரும், அகுஸ்தீன் அவர்களின் மனமாற்றம் திடீரென ஏற்பட்டது அல்ல மற்றும், ஆரம்பத்திலே முழுமையாய் நடைபெற்றதும் அல்ல என்பதைப் புரிந்துகொள்வார்கள். மேலும், வாழ்வின் உண்மையான மற்றும் சரியான பாதையை இந்நூல் விளக்குகின்றது என்பதையும் புரிந்துகொள்வார்கள். இப்புனிதர், வாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை, பேரார்வத்துடன் உண்மையைத் தேடுபவராக விளங்கினார் என்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறினார். அகுஸ்தீனாரின் மனமாற்றம், நம் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது.

புனித அகுஸ்தீன் சொன்னார் - “நற்செய்தியில் நீ விரும்புவதை நம்பி, நீ விரும்பாததை ஒதுக்கினால், நீ நம்புவது நற்செய்தியை அல்ல, மாறாக, உன்னையே” என்று. இப்புனிதர் பற்றிய பகிர்வுகள் தொடரும்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

18/04/2018 14:14