சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

சாய்வு நாற்காலியில் அமர்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற இயலாது

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை

19/04/2018 15:00

ஏப்.19,2018. சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி நற்செய்தியைப் பறைசாற்ற இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் ஆற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய காலை திருப்பலியில் மறையுரை வழங்கிய திருத்தந்தை, திருத்தூதர் பணிகள் நூலில் பிலிப் மேற்கொண்ட அறிவிப்புப் பணியை மையப்படுத்தி, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

"எழுதல்", "நெருங்கிச் செல்லுதல்" "அச்சூழலைவிட்டு புறப்படுதல்" என்ற மூன்று செயல்பாடுகளில் கிறிஸ்தவர்களின் நற்செய்தி அறிவிப்புப் பணியின் பண்புகளைப் புரிந்துகொள்ளலாம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

ஸ்தேவானின் மறைசாட்சிய மரணம் உருவாக்கிய இன்னல்கள், திருத்தூதர்களையும், சீடர்களையும், அவர்களுக்குப் பழக்கமானச் சூழலுக்கு அப்பால் செல்வதற்குத் தூண்டின என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

எந்த இடத்திற்கு நாம் செல்லவேண்டும், எத்தனை மக்களுக்குப் போதிக்கவேண்டும் என்று திட்டமிடுவது, நற்செய்தி அறிவிப்புப் பணி அல்ல, மாறாக, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்றவாறு பணியாற்றுவதே, உண்மையான நற்செய்தி அறிவிப்புப் பணி என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

மேலும், "இரக்கம் நம் இதயத்தின் கதவுகளைத் திறக்கிறது, ஏனெனில், நாம் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்பதை அது உணரவைக்கிறது" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று பதிவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

19/04/2018 15:00