2018-04-19 15:20:00

ஆல்ஃபி ஈவான்சின் பெற்றோருக்கு இங்கிலாந்து ஆயர்கள் ஆதரவு


ஏப்.19,2018. தங்கள் மகன் ஆல்ஃபி ஈவான்சின் உயிரைக் காக்க, அக்குழந்தையின் பெற்றோர் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளிலும், தாங்கள் உள்ளத்தால் ஒன்றித்திருப்பதாக இங்கிலாந்து, மற்றும், வேல்ஸ் ஆயர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கண்டுபிடிக்க இயலாத மூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 23 மாதக் குழந்தை ஆல்ஃபி ஈவான்சின் தந்தை டாம் ஈவான்ஸ் அவர்கள், இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க வத்திக்கானுக்கு வருகை தந்ததையொட்டி, தங்கள் ஆதரவை வெளியிட்டு, ஆயர்கள் இவ்வறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

குழந்தை ஆல்ஃபி ஈவான்ஸ் விடயத்தில் ஆல்டர் ஹே மருத்துவமனை (Alder Hey Hospital) மேற்கொண்டுள்ள முயற்சிகளை தாங்கள் அறிந்துள்ளதாகவும், ஆதாரங்கள் ஏதுமின்றி அந்த மருத்துவமனைக்கு எதிராக கூறப்படும் கருத்துக்களை தாங்கள் நிராகரிப்பதாகவும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

உரோம் நகரில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனை, ஆல்ஃபி ஈவான்சுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வந்திருப்பது தங்களுக்கு மகிழ்வளிக்கிறது என்றும், இந்த மருத்துவமனை, பிரித்தானிய நீதிமன்றத்திற்கு தகுந்த ஆதாரங்களை வழங்கி, குழந்தையை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்ல முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தாங்கள் நம்புவதாகவும் ஆயர்கள் கூறியுள்ளனர்.

திருத்தந்தையோடு இணைந்து, ஆயர்கள் அனைவரும், ஆல்ஃபியின் பெற்றோருக்கு தங்கள் செபங்கள் வழியே உறுதுணையாக இருப்பதாக, இங்கிலாந்து, மற்றும், வேல்ஸ் ஆயர்கள் இவ்வறிக்கையில் உறுதி அளித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.