2018-04-19 15:29:00

இத்தாலியில் புகலிடம் கோரும் ஆல்ஃபி ஈவான்சின் தந்தை


ஏப்.19,2018. குழந்தை ஆல்ஃபி ஈவான்சின் தந்தை டாம் ஈவான்ஸ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஏப்ரல் 18, இப்புதன் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்த வேளையில், தன் குடும்பத்திற்கு இத்தாலியில் புகலிடம் பெறுவதற்கு திருத்தந்தை உதவவேண்டுமென்று தான் அவரிடம் விண்ணப்பித்துள்ளதாக கூறினார்.

திருத்தந்தையைச் சந்தித்தபோது அவரிடம் தன் உள்ளத்தில் இருந்த அத்தனை வேதனைகளையும் கூறியதாகவும், உரோம் நகர் குழந்தை இயேசு மருத்துவமனையில் தன் குழந்தைக்கு தகுந்த சிகிச்சை அளிக்கும் வகையில், தங்கள் குடும்பம் இத்தாலியில் குடியேறும் வழிகளை திருத்தந்தை செய்து தரவேண்டும் என்று, அவரிடம் கேட்டதாகவும், டாம் ஈவான்ஸ் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

தான் கூறிய அனைத்தையும் மிகுந்த பரிவுடன் கேட்டுக்கொண்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘இறைவனின் சக்தி உங்களிடம் அதிகம் உள்ளது’ என்று தன்னிடம் கூறியதை, டாம் ஈவான்ஸ் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

உயிரை வழங்கும் இறைவன் ஒருவருக்கே, உயிரை திரும்பப் பெறுவதற்கும் அதிகாரம் உள்ளது என்று திருத்தந்தை கூறியுள்ளதை, தானும், தன் மனைவியும் முற்றிலும் நம்புவதாகக் கூறிய டாம் ஈவான்ஸ் அவர்கள், தங்கள் மகனை இறுதிவரை காப்பது ஒன்றே தங்கள் வாழ்வின் இலக்கு என்று எடுத்துரைத்தார்.

தங்கள் மகன் ஆல்பி, இரண்டு நாள்களுக்கு முன்னர், நோயில் பூசுதல் அருளடையாளம் பெற்றான் என்றும், அன்றிலிருந்து அவனிடம் நல்ல மாற்றங்கள் தெரிகின்றன என்றும், டாம் ஈவான்ஸ் அவர்கள், Zenit கத்தோலிக்க நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.