சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ சுற்றுச்சூழல்

திருப்பீடம் பூர்வீக இன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு

பெரு நாட்டில் அமேசான் பகுதி மக்களுடன் உணவருந்தும் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP

20/04/2018 15:28

ஏப்.20,2018. பூர்வீக இன மக்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுவோர், அம்மக்களை மாண்போடு நடத்த வேண்டும் மற்றும் அவர்களைச் சார்ந்த அனைத்து விடயங்களும், அவர்களிடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என,  திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் உரையாற்றினார்.

“அமேசானில் மனித உரிமை மீறல்கள் : அவற்றைக் களையும் திட்டங்கள்” என்ற தலைப்பில், பூர்வீக இனத்தவர் பற்றி, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற 17வது அமர்வில், ஏப்ரல் 19, இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வில் திருப்பீட பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், பூர்வீக இனத்தவர் பற்றிய திருப்பீடத்தின் நிலைப்பாட்டை எடுத்துச் சொன்னார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கத்தோலிக்கத் திருஅவையும் அமேசான் குறித்து மிகவும் அக்கறை கொண்டிருப்பதையும், திருத்தந்தை, 2019ம் ஆண்டில், அமேசான் பகுதி பற்றி, சிறப்பு ஆயர் பேரவையை நடத்தவிருப்பதையும் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் அவுசா அவர்கள், திருத்தந்தை, இவ்வாண்டில் பெரு நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில், அமேசான் பகுதிக்குச் சென்றதையும் சுட்டிக்காட்டினார்.

உலகில் மிகப்பெரிய பருவமழைக் காடுகள் பகுதியாகிய அமேசான், ஒன்பது நாடுகளில் 21 இலட்சம் சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இப்பகுதியில், 28 இலட்சம் பூர்வீக இன மக்கள், 390 இனங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 240 மொழிகளைப் பேசுகின்றனர். இன்னும், இப்பகுதியில் 137 இன மக்கள், வெளியுலகத் தொடர்பின்றி வாழ்கின்றனர். இவை போன்ற விவரங்களையும், இம்மக்கள் மீது திருஅவை கொண்டிருக்கும் அக்கறையையும், ஐ..நா. கூட்டத்தில் குறிப்பிட்டார், பேராயர் அவுசா.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

20/04/2018 15:28