சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

பிறரன்புப் பணிகள், அன்போடு ஆற்றப்பட வேண்டும்

ஆயர் தொனினோ பெல்லோ உருவப்படத்திற்கு முன் அமர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்

20/04/2018 15:06

ஏப்.20,2018. பிறரன்புப் பணிகள், பிறரன்போடு ஆற்றப்படவில்லையெனில், அப்பிறரன்புப் பணிகள் போதுமானதாக இல்லை என்று, ஆயர் தொனினோ பெல்லோ அவர்கள் கூறியிருக்கும் சொற்களை, இன்று நினைவுகூர்வோம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமை வெளியிட்ட முதல் டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.

தென் இத்தாலியின் லெச்சே மாநிலத்தில், அலெஸ்ஸானோ (Alessano)வில் 1935ம் ஆண்டு மார்ச் 18ம் நாளன்று பிறந்த ஆயர் தொனினோ பெல்லோ அவர்கள், பொலோஞ்ஞாவில் இறையியல் கல்வியை முடித்தார். அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்ட பின்னர், 1982ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் Molfetta மற்றும் Ruvo மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார்.

இவர் தனது ஆயர் பணியில், சமூகத்தில் மிகவும் நலிந்தவர்களுக்கு உதவுவதில் அக்கறை காட்டினார். பல்வேறு பழக்கவழக்கங்களுக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக, ஒவ்வொரு பங்குத்தளத்திலும் பிறரன்புக் குழுக்களை உருவாக்கினார். தனது மறைமாவட்டத்திலிருந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டீனா, வெனேசுவேலா ஆகிய நாடுகளுக்கு குடிபெயர்ந்திருந்த மக்களைச் சந்திக்கச் சென்றார் இவர்.

1985ம் ஆண்டில் இத்தாலியின் Pax Christi அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆயர் தொனினோ அவர்கள், அப்பணியில் தனது வாழ்வின் இறுதிவரை நீடித்தார். வளைகுடா சண்டைகள் மற்றும், உலகின் பிற இடங்களில் இடம்பெற்ற போர்கள், ஏன், NATO அமைப்புக்கு எதிராகக்கூட, பொதுப்படையாக கண்டித்துப் பேசினார் இவர். வாகனங்கள் காற்று மாசுக்கேட்டை ஏற்படுத்தும் என்பதால், இவர் பெரும்பாலும் மிதிவண்டியையே பயன்படுத்தியுள்ளார். பேருந்திலும் பயணம் செய்துள்ளார். இவர், மக்களைச் சந்திப்பதற்காக, அடிக்கடி காப்பி கடைகள், உணவகங்கள் மற்றும் தெருக்களுக்குச் சென்றுள்ளார். 1992ம் ஆண்டில் இத்தாலிய மக்களுக்குத் தலைமைதாங்கி, அட்ரியாட்டிக்கிலிருந்து சரயேவோ வரை, அமைதிப் பயணம் மேற்கொண்டார் ஆயர் தொனினோ. 1993ம் ஆண்டில், Molfettaவில், தனது 58வது வயதில், புற்றுநோயால் காலமானார் ஆயர் தொனினோ. அமைதி மற்றும் நலிந்தோருக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்த, ஆயர் தொனினோ அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்குரிய பணிகள், 2007ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளன.

இன்னும், கடவுளைச் சந்திப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் எல்லாம், நாம் தேவையில் இருப்பவர்கள் என்பதை ஏற்பதற்காகவே. இந்தச் சந்திப்பதற்கு முக்கியமானது, நம்மையே நாம் தாழ்த்திக்கொள்வதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டரில் கூறியுள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

20/04/2018 15:06