2018-04-20 15:15:00

பாகிஸ்தான் அரசு பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ ஆலயம்


ஏப்.20,2018. பாகிஸ்தான் நாட்டின் வரலாற்றில், முதன்முறையாக, அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

ஃபாய்சலபாத் நகரிலுள்ள, அரசு வேளாண்மை ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்றாலயத்தை, இஸ்லாமபாத் மற்றும் ராவல்பிண்டி பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள், ஏப்ரல் 15, கடந்த ஞாயிறன்று அர்ச்சித்துள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தின் மத்திய கட்டடத்தில் புதிதாக அர்ச்சிக்கப்பட்டுள்ள, புனித மரியா சிற்றாலயம் பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்த பேராயர் அர்ஷத் அவர்கள், பல்கலைக்கழகத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயம், பாகிஸ்தான் நாடு முழுவதற்கும், அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை வழங்கும் என்று தெரிவித்தார்.

கிறிஸ்தவர்கள் இங்கு வந்து செபித்து, இந்நிறுவனம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளமைக்கும் செபிக்கலாம் என்றுரைத்த பேராயர், இந்த ஆலயம் அமைக்கப்பட்டதற்கு, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.   

பாகிஸ்தானின் பல்கலைக்கழகங்களில் இதுவரை கிறிஸ்தவ ஆலயங்கள் இல்லை. இந்தப் புதிய ஆலயம், 500 சதுர மீட்டரில், 76 இலட்சம் பாகிஸ்தான் ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு Faisalabad மறைமாவட்டம் முப்பது இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.