2018-04-21 15:50:00

இறையன்பிலும், பிறரன்பிலும் வளர குழு வாழ்வு


ஏப்.21,2018. உரோம் நகரிலுள்ள, ஆங்கில குருத்துவ கல்லூரியில் தங்கிப் படிக்கும்,  ஏறத்தாழ ஐம்பது, மாணவர்கள் மற்றும் அக்கல்லூரியின் நிர்வாகிகளை, இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வின் இரு அடித்தளக் கற்களாகிய இறையன்பு, பிறரன்பு ஆகிய இரண்டையும் பற்றிப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

குருத்துவ மாணவர்கள், ஆண்டவரின் அழைப்புக்குப் பதிலளித்து தொடரும் பயணத்தில், ஆண்டவரோடுள்ள உறவிலும், மற்றவர் மீது, குறிப்பாக, அதிகத் தேவையில் இருப்போர்மீது அக்கறை காட்டுவதிலும், மிக ஆழமாக எப்போதும் வளர வேண்டுமென்று, தான் செபிப்பதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவருக்கு வாழ்வு முழுவதும் உறுதியுடன் அர்ப்பணிப்பதற்குத் தங்களைத் தயார் செய்யும் இளையோரைப் பார்க்கும்போது மகிழ்வாக உள்ளது என்றும், தனது குருத்துவ பயிற்சிக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், இக்காலத்தின், நிலையற்ற கலாச்சாரத்தின் மத்தியில், குருத்துவ பயிற்சி வாழ்வு, இன்றைய இளையோருக்கு கடினமானது என்றும் உரைத்த திருத்தந்தை, இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு, இந்தப் பயிற்சி காலத்தில், அகவாழ்வில் ஆழப்படுமாறு வலியுறுத்தினார்.

நமக்காக நாம் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதில்லை, மாறாக, பிறருக்காக நாம் சான்று பகர்கின்றோம் என்றும், குழு வாழ்வு வழியாக, இறையன்பிலும், பிறரன்பிலும்  வளர முடியும் என்றும், கிறிஸ்தவ வாழ்வில் நாம் எதிர்நோக்கும் தடைகளை, அன்பு, செபம், மற்றும் நகைச்சுவை உணர்வோடு மேற்கொள்ளலாம் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னல்கள், சோதனைகள் பற்றியும், தங்களைப் பற்றியும், அஞ்சாமல் கடவுளுக்கு இறுதிவரை உறுதியாய் பணியாற்றுமாறும் கூறியத் திருத்தந்தை, நல்ல மற்றும் முழுமையான நட்புறவை வளர்த்துக் கொள்வது, வருங்கால இறைப்பணிக்கு உதவியாக இருக்கும் என்று, அக்குருத்துவ மாணவர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.