2018-04-21 16:10:00

கியூப அரசியல் மாற்றம் குறித்து தலத்திருஅவை


ஏப்.21,2018. கியூபாவில் புதிய அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அரசியலில் குறிப்பிடதக்க மாற்றங்கள் நிகழும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை என, அந்நாட்டில், மிகுவேல் டயஸ் கேனல் அவர்கள், புதிய அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்தார், தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

கியூபாவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படும் எனில், அது, உதவி அரசுத்தலைவர்கள் குழுவில் ஏற்படும் மாற்றமாக இருக்கும் என, சந்தியாகோ உயர்மறைமாவட்டத்தின் ஊடகத்துறை பொறுப்பாளர், மரியா லோப்பெஸ் அவர்கள் கூறினார்.

அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோ அவர்கள் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது போலவே, புதிய அரசுத்தலைவரின் காலத்திலும், கத்தோலிக்கத் திருஅவை, அரசுடன் தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபடும் என்றும், லோப்பெஸ் அவர்கள் பீதேஸ் செய்தியிடம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 17, இச்செவ்வாயன்று, கியூபாவின் நாடாளுமன்றத்தால், மிகுவேல் டயஸ் கேனல் அவர்கள் புதிய அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்துடன் காஸ்ட்ரோ குடும்பத்தின் நீண்ட ஆட்சிக்காலம் நிறைவுக்கு வந்துள்ளது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்த, ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள், உடல்நலம் குன்றிய காரணத்தால், 2006ம் ஆண்டு தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அவர்களை, கியூபாவின் தலைவராக நியமித்தார்.  தற்போது ராவுல் காஸ்ட்ரோ அவர்கள், பதவி விலகினாலும், கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில், அவர் பலம்பொருந்திய மற்றும் செல்வாக்குள்ள நபராக இருப்பார் என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.