2018-04-21 16:02:00

கியூப இளையோருக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி


ஏப்.21,2018. நாம் சுயத்திற்கே முழுவதும் முக்கியத்துவம் கொடுக்கும்போது, வாழ்வில் கடவுளுக்கு இடமில்லாமல் ஆக்கிவிடுகின்றோம். எனவே, மனமாற்றத்திற்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியானது.

மேலும், ஏப்ரல் 22, இஞ்ஞாயிறு காலை 9.15 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், 16 தியாக்கோன்களை, அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்வார். இவர்களில் மூவர் தமிழகத்தையும், தமிழ் பேசும் மற்றொருவர் மியான்மாரையும் சேர்ந்தவர்கள். இஞ்ஞாயிறன்று 55வது உலக இறையழைத்தல் தினம் சிறப்பிக்கப்படுகின்றது.

மேலும், இச்சனிக்கிழமையன்று கியூபா நாட்டு இளையோருக்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துணிச்சலுடன், ஒன்றிணைந்து கியூபத் திருஅவையைக் கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கடவுளின் அழைப்பில் கவனம் செலுத்துவதற்கு ஒருபோதும் அஞ்ச வேண்டாமெனவும், இயேசுவின் அன்பில் திளைத்து, தலத்திருஅவையின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார், திருத்தந்தை.

கடவுளின் அழைப்பு, எல்லாச் சூழல்களிலும் பிரசன்னமாக இருக்கின்றது என்றும், அவரின் அழைப்புக்குத் தாராள மனதுடன் இதயங்களைத் திறக்குமாறும் கூறியுள்ள திருத்தந்தை, பானமா நாட்டில் நடைபெறவுள்ள உலக இளையோர் நாளும், 2018ம் ஆண்டு நவம்பரில் கியூபாவில் இடம்பெறவுள்ள தேசிய இளையோர் நாளும், இந்நாள்களிலும், வருங்காலத்திலும், கியூப கத்தோலிக்கத் திருஅவையைத் தொடர்ந்து கட்டியெழுப்ப வாய்ப்புக்களாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இளையோரே, நீங்கள் தனியாக இல்லையென்பதை அறிந்துகொள்ளுங்கள், நாம் சார்ந்துள்ள உறுதியான சமூகத்திலிருந்து, திருஅவையை எழுப்புகின்றோம் என்றுரைத்துள்ள திருத்தந்தை, கியூப இளையோர், நாட்டுப்பற்றுடன், நாட்டை அன்புகூர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.