2018-04-21 16:17:00

கொரியத் தலைவர்களின் சந்திப்புக்காக செபிக்க அழைப்பு


ஏப்.21,2018. வட மற்றும் தென் கொரிய நாடுகளின் தலைவர்கள் சந்திக்கவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கூட்டம், அவ்விரு நாடுகளுக்கிடையே பல காலமாக நிலவி வரும் பதட்டநிலைகளை முடிவுக்குக் கொண்டுவரும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார், கொரிய ஆயர் பேரவையின் அதிகாரி ஒருவர்.

2007ம் ஆண்டுக்குப் பின்னர், இவ்வாண்டு ஏப்ரல் 27, அதாவது வருகிற வெள்ளிக்கிழமையன்று, இரு கொரிய நாடுகளின் அரசுத்தலைவர்கள் சந்திக்கவிருப்பது குறித்து யூக்கா செய்தியிடம் பேசியுள்ள, கொரிய ஆயர் பேரவையின் ஒப்புரவு பணிக்குழுவின் தலைவர், ஆயர் பீட்டர் லீ க்-ஹெயோன் அவர்கள், கொரிய தீபகற்பத்தின் அமைதிக்காகச் செபிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில், இவ்விரு தலைவர்களும், 1950ம் ஆண்டு முதல், 1953ம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என்று, தான் நம்புவதாகத் தெரிவித்தார், ஆயர் பீட்டர்.

தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன், வட கொரிய அரசுத்தலைவர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும், தென் கொரியப் பகுதியில், ஏப்ரல் 27ம் தேதி சந்தித்து, கலந்துரையாட உள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.