2018-04-23 15:39:00

ஆல்ஃபி ஈவான்ஸ் சார்பில் 49 அன்னையர் அனுப்பிய மடல்


ஏப்.23,2018. உரோம் நகரின் குழந்தை இயேசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் தங்கள் குழந்தைகள், துன்புறவில்லை, வாழ்கின்றனர் என்று, 49 அன்னையர், இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

லிவர்பூல் நகரில் உள்ள ஆல்டர் ஹே (Alder Hey) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆல்ஃபி ஈவான்ஸ் என்ற குழந்தையின் உயிரைக் காக்க வழங்கப்பட்டு வரும் செயற்கை சுவாச உதவிகள் நிறுத்தப்படவேண்டும் என்று அந்த மருத்துவமனை தீர்மானம் செய்ததைத் தொடர்ந்து, இந்த மடலை, 49 அன்னையர், குழந்தை இயேசு மருத்துவமனையின் தலைவர் மரியெல்லா ஈனோக் அவர்கள் வழியே அனுப்பியுள்ளனர்.

குழந்தை இயேசு மருத்துவமனையின் ஒரு பகுதியான பாலிதோரோவில் (Palidoro) தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ள அன்னையர், நோய், குறைபாடுகள் இவற்றைத் தாண்டி, தங்கள் குழந்தையின் உயிர் மிகவும் உன்னதமானது என்பதை தங்கள் மடலில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

குழந்தை ஆல்ஃபி ஈவான்ஸுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்வதற்கு குழந்தை இயேசு மருத்துவமனை தயாராக உள்ளது என்பதை அறிந்த அக்குழந்தையின் பெற்றோர், ஆல்ஃபியை இத்தாலிக்கு கொண்டு செல்லும் வகையில் இங்கிலாந்து நாட்டின் உச்ச நீதி மன்றத்திற்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.