2018-04-23 15:41:00

திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை


ஏப்.23,2018. திருத்தூதர் பேதுருவால் குணமடைந்த மனிதரில், நாம் ஒவ்வொருவரும், நமது சமுதாயங்களும் நம்மையே அடையாளப்படுத்திக்கொள்ளமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 22 நண்பகல் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார்.

நல்லாயன் ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியத் திருத்தந்தை, நாசரேத்து இயேசுவின் பெயரால் நலமடைந்து நிற்கும் மனிதரைக் குறித்து புனித பேதுரு கூறும் சொற்கள் அடங்கிய இஞ்ஞாயிறு முதல் வாசகத்தை மையப்படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

பேதுரு சுட்டிக்காட்டும் இயேசு எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய நற்செய்தி நமக்குத் தெளிவுபடுத்துகிறது என்று கூறியத் திருத்தந்தை, நமது பெயர்களையும், நம்மையும் முழுமையாக அறிந்துள்ள நல்ல ஆயன், நம் இயேசு என்று எடுத்துரைத்தார்.

நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளேயே தங்கிவிடாமல், நல்லாயன் இயேசு அழைக்கும் குரலுக்குச் செவிமடுக்கும்போது, நாம் முற்றிலும் குணம் பெறுகிறோம் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.