2018-04-24 15:51:00

ஆவியார் கொணரும் புதிய செய்திகளுக்குத் திறந்த மனதுடையவராய்..


ஏப்.24,2018. மனித வரலாற்றில், தூய ஆவியாரால் செய்திகள் கொண்டுவரப்படும் வேளைகளில் எல்லாம், எப்போதுமே எதிர்ப்புகள் இருந்து வருகின்றன என்றும், இவை, எப்போதுமே புதிய செய்திகளாக நம்மைச் சந்திக்க வருகின்றன என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை மறையுரையில் கூறினார்.

இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூதச் சட்ட வல்லுனர்களின் மூடிய மனநிலை பற்றிப் பேசும், இத்திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை (யோவா.10,22-30) மையப்படுத்தி மறையுரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

யூதச் சட்ட வல்லுனர்கள், எவ்வளவு இறுக்கமான மனநிலையுடன் சட்டத்தைக் கடைப்பிடித்துள்ளனர் என்றுரைத்த திருத்தந்தை, இந்த வல்லுனர்கள், தங்களையே மையப்படுத்தி இருந்ததால், தூய ஆவியாரின் செயல்களால் தொடப்படாமல் இருந்தனர் என்று கூறினார்.

இந்த வல்லுனர்கள், வாழ்வாகிய சட்டத்தைப் பெற்றனர், ஆனால் அவர்கள், அச்சட்டத்தை வடிகட்டி, ஒரு கருத்தியலுக்குள் மாற்றினார்கள் மற்றும், அதைக் கடந்து செல்ல முடியா நிலையில் இருந்தனர் என்றும் கூறியத் திருத்தந்தை, புதியதாக இருக்கும் எதுவும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தன என்றும் கூறினார்.

இதற்கு மாறாக, கடவுளின் உண்மையான குழந்தைகளுக்கு, தூய ஆவியார் மையமாக விளங்குவார் என்றும், இத்திருப்பலியில் வாசிக்கப்பட்ட திருத்தூதர் பணிகள் நூல் பகுதியும், முதல் திருத்தூதர்கள், தங்களுக்குப் புதியனவாகத் தெரிந்தவைகளுக்கு, பணிந்து நடப்பவர்களாய் இருந்தனர் என்பதை எடுத்துரைக்கின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

தூய ஆவியாரின் செயல்களுக்குத் திறந்தவர்கள் அல்லது மூடியவர்களாக ஒருவர் இருக்க இயலும், எனவே, ஆவியானவருக்கு எப்போதும் திறந்த மனதுள்ளவர்களாய் வாழ்வதற்கு அவரின் வல்லமையை இறைஞ்சுவோம் எனச் சொல்லி, ஒரு சிறு செபத்துடன் மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.