2018-04-24 15:57:00

வாழ்வு கொடையாக வழங்கப்படும்போது அர்த்தம் பெறுகிறது


ஏப்.24,2018. “வாழ்வு, ஒரு கொடையாக வழங்கப்படும்போது மட்டுமே, அது முழு அர்த்தம் பெறுகிறது. வாழ்வு, தனக்காக வாழப்படும்போது சுவையின்றி மாறுகிறது” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், திருப்பீடத் தலைமையகச் சீர்திருத்தத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் சி9 கர்தினால்கள் அவைக் கூட்டத்தில், இச்செவ்வாயன்று கலந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 23, இத்திங்களன்று தொடங்கியுள்ள இந்தக் கூட்டம், ஏப்ரல் 25, இப்புதனன்று நிறைவடையும்.

இன்னும், இங்கிலாந்தின் லிவர்பூல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் 23 மாதக்குழந்தை ஆல்ஃபி ஈவான்சின் வாழ்வை நீட்டிக்கும் முயற்சியாக, இத்திங்களன்று அக்குழந்தைக்கு, குடியுரிமையை வழங்கியுள்ளது இத்தாலிய அரசு.

கண்டுபிடிக்க இயலாத மூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆல்ஃபி ஈவான்ஸ், உரோம் நகரின் குழந்தை இயேசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கு, இத்தாலிய அரசின் இந்தச் சலுகை உதவும் என்று நம்பப்படுகின்றது.

ஆல்ஃபி ஈவான்சின் தந்தை டாம் ஈவான்ஸ் அவர்கள், கடந்த வாரத்தில், வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, தன் மகனுக்கு இத்தாலிய குடியுரிமை வழங்கப்படுவதற்கு விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.