2018-04-25 16:39:00

அருணாச்சல் பிரதேச இளையோரின் ஓப்பியம் எதிர்ப்பு


ஏப்.25,2018. இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தின் இளையோர் ஒன்றிணைந்து, அப்பகுதியில் பரவியுள்ள ஓப்பியம் போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்த்து, மூன்று நாள் கருத்தரங்கையும், போராட்டங்களையும் மேற்கொண்டனர் என்று, இந்திய ஆயர் பேரவையின் அறிக்கையொன்று கூறுகிறது.

அருணாச்சல் பிரதேசத்தின் லோங்டிங் (Longding) மாவட்டத்தைச் சேர்ந்த 51 கிராமங்களிலிருந்து வந்திருந்த 300க்கும் மேற்பட்ட இளையோர், ஏப்ரல் 20ம் தேதி முதல் 23ம் தேதி முடிய, டிஸ்ஸா (Tissa) என்ற ஊரில், டி பால் பள்ளியில் இக்கருத்தரங்கை நடத்தினர்.

இக்கருத்தரங்கில் பங்கேற்றுள்ள அனைத்து இளையோரும் ஓப்பியம் போதைப்பொருளைத் தொடப்போவதில்லை என்று உறுதியளித்தால், அதுவே, இந்த மாநிலத்திற்கு பெரும் உந்து சக்தியாக அமையும் என்று, இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த ஆயர் ஜார்ஜ் பள்ளிப்பரம்பில் அவர்கள் இளையோரிடம் கூறினார்.

கடந்த இரு மாதங்களாக வீடு வீடாக இளையோர் மேற்கொண்ட ஓர் ஆய்வின் விளைவாக இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யபப்ட்டதென்று, கத்தோலிக்க இளையோர் சங்கத்தின் செயலர், ஹோன்லெம் கான்காம் (Honlem Khangham) அவர்கள் கூறினார்.

இந்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, இந்திய நாட்டில், அருணாச்சல் பிரதேசம், ஓப்பியம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.