2018-04-25 15:34:00

இமயமாகும் இளமை - ஒரு ரூபாயில் ஒருவரின் பசியைத் தீர்க்கும்..


இந்தியாவில், ஒவ்வொரு நாளும் நடக்கும் இலட்சக்கணக்கான திருமண விருந்துகள் மற்றும், ஏனைய விருந்துகளில் ஐந்தில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப்பட்டு, குப்பைகளில் கொட்டப்படுகின்றது. இவ்வாறு வீணாக்கப்படும் உணவுகளைச் சேகரித்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறது 'No Food Waste' அமைப்பு. இந்த அமைப்பு, கோவையைச் சேர்ந்த இளைஞர்களால், 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.​​ இவர்களின் 90877 90877 எனும் உதவி தொலைபேசி எண்ணை அழைத்தால், இவர்கள் அந்தந்த இடங்களுக்குச் சென்று உணவை எடுத்துச் செல்கின்றனர். கொண்டுசெல்லும் உணவின் தரத்தை உண்ணக் கூடியதா என பரிசோதித்து, உடனே அவற்றைக் காப்பகங்கள், சேரிகள், முதியோர் இல்லங்கள், வீடின்றி வாழும் ஏழைகள் ஆகியோருக்கு, இவர்களே விநியோகம் செய்கின்றனர். இவர்களை 'No Food Waste' சிறப்பு மொபைல் ஆப் மூலமும் தொடர்புகொள்ள முடியும். தமிழகத்தில், கோவை, சென்னை,​ ஈரோடு,​ சேலம், திருச்சி, திருப்பூர், தர்மபுரி; ஆந்திராவில், ​​தாடேபள்ளி​கூ​டம் மற்றும் ஏலூரு; கேரளாவில், திருவனந்தபுரம், இன்னும் ஒடிசா மாநிலத்திலும் இவர்களின் சேவையால் தினம் தினம் ஆயிரக்கணக்காண எளிய மக்கள் பசியாறுகின்றனர்.​ இதுவரை 'No Food Waste' அமைப்பு வழியாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இவர்கள்,  F&B ATM எனும் இலவச உணவளிக்கும் குளிர்சாதன பெட்டிகளை, கோவை மற்றும் சேலத்தில் நான்கு இடங்களில் இயக்கி வருகின்றனர். மக்கள், இதில் உண்ணக்கூடிய உணவுகளை வைத்துவிட்டால், தேவைப்படும்போது உணவின்றி வாடுவோர் அதை எடுத்து பயனடைந்து கொள்கின்றனர். முழுவதும் பொது மக்களின் ஆதரவோடு இயங்கும் இந்த அமைப்புக்கு, மீதமாகும் உணவு இலவசமாக வந்துசேர்ந்தாலும், இதில் முழுநேரமாக வேலை செய்யும் தொண்டர்கள், ஓட்டுனர்களுக்கு ஊதியம், பயணச் செலவு மற்றும் இதர செலவுகளுக்கு, 'Feeding the Needy' , ​எனும் பெயரில் நிதி திரட்டும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது இந்த அமைப்பு. 'No Food Waste' அமைப்பில் ஒருவருக்கு ஒருவேளை உணவளிக்க ஆகும் செலவு ஒரு ரூபாய்தானாம். இதைப் பாராட்டி மத்திய அரசு, இவர்களுக்கு 'சிறந்த புதுமையான செயல் திட்டம்' என 2017ம் ஆண்டில் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

இந்தியாவில், ஐந்தில் ஒருவர் வீதம், உணவு இல்லாமல் நிமிடத்துக்கு நிமிடம் இறந்துபோகிறார் என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.