2018-04-25 15:44:00

திருத்தந்தை:திருமுழுக்கு தீமையை மேற்கொள்ள சக்தி அளிக்கிறது


ஏப்.25,2018. நற்செய்தியாளர் புனித மாற்கு திருவிழாவாகிய ஏப்ரல் 25, இப்புதன் காலை பத்து மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய பொது மறைக்கல்வியுரையைக் கேட்பதற்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இருபதாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள் அமர்ந்திருந்தனர். பவுலடிகளார், பிலிப்பியருக்கு எழுதிய திருமடலின் நான்காம் பிரிவு  12,13ம் திருசொற்கள், பல மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டன. “எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு(பிலி.4,12-13)”. அதன் பின்னர், திருமுழுக்கு, தீமையை மேற்கொள்ள சக்தி அளிக்கின்றது என்ற பொருளில் மறைக்கல்வியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

அன்பு சகோதர, சகோதரிகளே, திருமுழுக்கு அருளடையாளம் பற்றிய நமது மறைக்கல்வியில், கிறிஸ்து, மரணத்திலிருந்து வாழ்வுக்குக் கடந்து சென்ற பாஸ்கா மறையுண்மையில், விசுவாசம் வழியாக நாம் நுழைவதற்கு, திருமுழுக்கு அருளடையாளம் கதவாக அமைந்துள்ளது என நோக்கினோம். இறைவார்த்தையின் ஒளியால் வழிநடத்தப்பட்டு, விண்ணகத்திலுள்ள புனிதர்கள் மற்றும் மண்ணகத்திலுள்ள நம் சகோதரர் சகோதரிகளின் செபங்களின் உதவியுடன், விசுவாச மற்றும் திருஅவையின் அருளடையாள வாழ்வுப் பயணத்தை, நாம் தொடங்குகின்றோம். கிறிஸ்தவ வாழ்வு, இறையருள் துணையோடு, பாவத்தை விட்டுவிட்டு, ஆண்டவரோடு ஒன்றிப்பில் வளருவதற்கு, ஒரு தொடர் போராட்டமாக அமைந்துள்ளது. இந்த ஆன்மீகப் போராட்டத்திற்குத் தேவைப்படும் சக்தியின் அடையாளமாக, திருமுழுக்குப் பெறவிருப்பவர்களின் நெற்றியில் முதலில் எண்ணெய் தடவப்படுகின்றது. இந்த எண்ணெய் பூசுதல் மற்றும், இவ்வழிபாட்டுச் சடங்கிலுள்ள சாத்தானை விரட்டும் செபங்களில், தூய ஆவியானவரின் கொடைக்காக மன்றாட்டு எழுப்பப்படுகின்றது. சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் தூய ஆவியார், கிறிஸ்துவில் கடவுளின் வளர்ப்புப்பிள்ளைகளாக, சுதந்திரத்தில் நாம் நிலைத்திருக்க, நம்மை உறுதிப்படுத்துகின்றார். பழங்கால விளையாட்டு வீரர்கள், தங்களைப் போட்டிக்குத் தயார்படுத்துவதற்கு, தங்களை  எண்ணெய்யால் பூசிக்கொள்வதுபோல, நாமும், பாவம் மற்றும் மரணத்தின் மீது ஆண்டவர் வெற்றியடைந்ததில் நம்பிக்கை வைத்து, அகிலத் திருஅவையின் செபங்களால் ஊட்டம்பெற்று, விண்ணகத்தில் நம் நம்பிக்கை முழுமையடைவதற்கு காத்திருப்பவர்களாக, இறையருளின் புதிய வாழ்வில் முழுமையாய் வாழ்வதற்கு நம்மையே நாம் தயார்படுத்துகின்றோம்.  

இவ்வாறு இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 27, இவ்வெள்ளிக்கிழமையன்று, இரு கொரிய நாடுகளின் அரசுத்தலைவர்கள் மூன் ஜே இன், கிம் ஜாங் உன் ஆகிய இருவரும் Panmunjeomல் சந்திக்கவுள்ளனர் என்றும், இவர்களின் இச்சந்திப்பு, கொரிய தீபகற்பத்திலும், உலகெங்கிலும் அமைதிக்கு உறுதியளிக்கும் விதமாக, ஒன்றிப்புக்கும், ஒப்புரவுக்கும் இட்டுச்செல்லும் ஒளிவுமறைவற்ற கலந்துரையாடலுக்கு தகுந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், அமைதிக்காக ஏங்கும் கொரிய மக்களுக்காகச் செபிக்கின்றேன் என்றும் கூறினார். மேலும், அரசியல் தலைவர்கள், அமைதியின் கருவிகளாக மாறி, அனைத்து மக்களின் நன்மைக்காக எடுத்துள்ள பாதையை துணிச்சலுடன் செயல்படுத்துமாறும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகள் எல்லாரையும் வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.