2018-04-25 16:08:00

பாலியல் துன்பங்கள் அடைந்தோரைச் சந்திக்கும் திருத்தந்தை


ஏப்.25,2018. "நம்பகமான கிறிஸ்தவர்கள், மற்றவர்களைக் குறித்து திறந்த மனம் கொண்டவர்களாக, தாங்கள் வாழும் இடங்களை அவர்களோடு பகிர்ந்து, அவ்விடங்களை, அனைவரும் ஒன்றிணைந்து வாழும் இடங்களாக மாற்றுவதற்கு அஞ்சமாட்டார்கள்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 25 இப்புதனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

மேலும், சிலே நாட்டில், அருள்பணியாளர்களால், பாலியல் முறையில் துன்பங்களை அனுபவித்த மூன்று பேரை, இவ்வார இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்திப்பார் என்று, திருப்பீட செய்தித் துறையின் தலைவர், Greg Burke அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

Juan Carlos Cruz, James Hamilton, Jose Andrés Murillo என்ற மூவரையும் தனித்தனியே சந்திக்கும் திருத்தந்தை, அவர்களின் துயரங்களில் பங்கேற்று, அவர்களிடம் மன்னிப்பும் கோருவதோடு, சிலே தலத்திருஅவையில், இத்தகைய குற்றங்கள் இனியும் நிகழாத வண்ணம், இம்மூவரிடமும் ஆலோசனைகளையும் கேட்க விழைகிறார் என்று Burke அவர்கள் கூறினார்.

திருஅவை முழுவதிலும், குறிப்பாக, சிலே தலத்திருஅவையில், அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறுகள் நிகழ்வதை, குறிப்பாக, பாலியல் முறைகேடுகள் நிகழ்வதைத் தடுப்பதற்கு இந்த சந்திப்பு வழிவகுக்கும் என்று திருத்தந்தை நம்புவதாக, Burke அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.