சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

அன்பில்லாத திருஅவை, முன்னோக்கிச் செல்ல இயலாது - திருத்தந்தை

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

26/04/2018 15:12

ஏப்.26,2018. அன்பு செய்தல், பணியாற்றுதல், அனுப்பப்படுத்தல் என்ற மூன்று அடித்தளங்களின் மீது திருஅவை கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், இயேசு, தன் இறுதி இரவுணவில், சீடர்களுக்கு வழங்கிய உரையின் ஒரு பகுதி, இவ்வியாழனன்று நற்செய்தியாக வாசிக்கப்பட்டதை மையப்படுத்தி, திருத்தந்தை தன் மறையுரைக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறுதி இரவுணவின்போது, காலடிகளைக் கழுவுதல், மற்றும் அப்பத்தையும் இரசத்தையும் தன் உடலாக, குருதியாக மாற்றுதல், என்ற இரு செயல்களின் வழியே, இயேசு, தன் திருஅவையின் அடித்தளத்தை உருவாக்கினார் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

அளவற்ற முறையில் இயேசு அன்பு காட்டியதுபோல், நாமும் அன்பு காட்ட அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பின்றி செயலாற்றும் திருஅவை, வெறும் வெளித்தோற்றம் கொண்ட உயிரற்ற ஓர் அமைப்பாக விளங்கும் என்று எடுத்துரைத்தார்.

பணியாற்ற அனுப்பப்பட்ட அனைத்து சீடர்களும், புனிதர்களும், அன்பு, பணிவான சேவை என்ற இரு பண்புகளை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கிவந்தனர் என்று கூறிய திருத்தந்தை, இவை இல்லாத திருஅவை, முன்னோக்கிச் செல்வது இயலாது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

26/04/2018 15:12