2018-04-26 16:01:00

ஒவ்வொரு குடும்ப வரலாற்றிலும் குடிபெயர்தல் உள்ளது


ஏப்.26,2018. 'பயணத்தைப் பகிர்வோம்' என்ற கொள்கை பரப்பு முயற்சியை, காரித்தாஸ் அமைப்பு மேற்கொள்ளும் என்று, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

உலகில் வாழும் நாம் அனைவரும் பயணிகள் என்ற உண்மையை உணர்வதற்கும், சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், 'பயணத்தைப் பகிர்வோம்' என்ற கொள்கை பரப்பு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று, கர்தினால் தாக்லே அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

உலகமெங்கும் நிகழ்ந்துவரும் குடிபெயர்தல், மற்றும் புலம் பெயர்தல் என்ற உண்மைக்கு கத்தோலிக்க விசுவாசிகள் தகுந்த முறையில் தங்கள் பதிலிறுப்பை வழங்குவதற்கு, காரித்தாஸ் அமைப்பின் இந்த முயற்சி உதவியாக இருக்கும் என்று, கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்தார்.

'பயணத்தைப் பகிர்வோம்' என்ற கொள்கை பரப்பு முயற்சியில், உலகின் பல மறைமாவட்டங்கள் ஆர்வமாகப் பங்கேற்றுவருவது உற்சாகமூட்டுவதாக உள்ளது என்று, கர்தினால் தாக்லே அவர்கள், மகிழ்வை வெளியிட்டார்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் இவ்வுலக வாழ்வில் பயணிகள் என்பதையும், ஒவ்வொருவரின் குடும்ப வரலாற்றிலும் முன்னோர் குடிபெயர்ந்தவர்களாய் இருந்தனர் என்பதையும் நாம் உணர்ந்தால், குடிபெயரும் மனிதர்களை இன்னும் அதிக மரியாதையுடன் நடத்தமுடியும் என்று, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் தாக்லே அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.