சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

விண்ணகம், இயேசுவை முகமுகமாய்க் காணும் மகிழ்வைத் தருவது

திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார்

27/04/2018 14:55

ஏப்.27,2018. விண்ணகம், இயேசுவை முகமுகமாய்த் தரிசிப்பதில், என்றென்றும் மகிழ்வைத் தரும் இடம் என்றும், சிலர் கற்பனை செய்வதுபோல், இது அலுப்பூட்டும் இடமல்ல என்றும், இவ்வெள்ளிக்கிழமை காலையில், மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவின் தொழுகைக்கூடத்தில் பவுலடிகளார் உரையாற்றியது பற்றிய, இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தை (தி.ப.13,26-33) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, எருசலேமில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் அவர்களின் மதத் தலைவர்கள், இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், மரணத்திற்குத் தீர்ப்பிட்டார்கள், ஆனால் இயேசு இறந்தோரினின்று உயிர்பெற்றெழுந்தார் என்று பவுலடிகளார் பேசினார் என்றார்.

இவ்வெள்ளிக்கிழமை காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களின் இம்மண்ணுலகப் பயணம், விண்ணை நோக்கியது, அங்கே, இயேசுவை நேரில் முகமுகமாய்ச் சந்திக்கும் மகிழ்வால் வரவேற்கப்படுவோம் என்று உரைத்தார்.  

இயேசுவைச் சந்திப்பதற்காக நான் பயணம் மேற்கொள்கிறேன், இச்சந்திப்பு என்றென்றும் என்னை மகிழ்ச்சிப்படுத்தும் என்ற எண்ணத்தை நாம் கொண்டிருக்க வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, அதேநேரம், இயேசு நமக்காக வேலை செய்து கொண்டிருக்கின்றார் மற்றும் நமக்காகச் செபித்துக் கொண்டிருக்கின்றார் என்று கூறினார்.

இயேசு எனக்காகச் செபித்துக் கொண்டிருக்கின்றார், எனக்கு ஓர் இடத்தைத் தயார் செய்வதற்கு வேலை செய்து கொண்டிருக்கின்றார் என, நாம் ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, இயேசு வாக்கு மாறாதவர், அவர் வாக்குறுதி அளித்தவாறே செயலாற்றுகின்றார் என்று கூறினார்.

இயேசு எனக்காகச் செபித்துக் கொண்டிருக்கின்றார் என்ற நினைவில், விண்ணகம் நோக்கி நாம் பயணம் மேற்கொள்ள, ஆண்டவரின் அருளை இறைஞ்சுவோம் என்று, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

27/04/2018 14:55