2018-04-27 15:54:00

எருசலேமின் வரலாற்று தனித்துவமிக்கப் பண்பு காக்கப்பட வேண்டும்


ஏப்.27,2018. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் தொடங்கி, சிரியா மற்றும் ஏமனில் இடம்பெற்று வரும் பிரச்சனைகள் வரை, மத்திய கிழக்கின் நிலைமை, உலகளாவிய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகவும் கவலைதரும் விவகாரமாக அமைந்துள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் கவலை தெரிவித்தார்.

பாலஸ்தீன விவகாரம் உட்பட, மத்திய கிழக்கின் நிலைமை குறித்து, ஐ.நா. பாதுகாப்பு அவையில் நடைபெற்ற திறந்த கலந்துரையாடலில், இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா. தலைமையிடத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

சிரியாவில் விவரிக்க முடியாத துன்பங்களையும், அழிவுகளையும், புறக்கணிப்புக்களையும் காண முடிகின்றது என்றும், ஏமனில் நடைபெறும் அறிவற்ற சண்டையின் விளைவுகள், உலகின் மிகப்பெரும் மனிதாபிமான பேரழிவாக நோக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார், பேராயர் அவுசா.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களைப் பொருத்தவரை, இரு நாடுகளின் தீர்வே, அவ்விரு பகுதிகளின் மக்கள், அமைதியான நல்லிணக்கத்துடன் ஒன்றித்து வாழ உதவும் என்ற கருத்துடைய, பெரும்பாலான ஐ.நா. பிரதிநிதிகளுடன் திருப்பீடமும் இணைகின்றது என்றும் பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள், அமைதியிலும், பாதுகாப்பிலும் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்றுரைத்த பேராயர் அவுசா அவர்கள், எருசலேம் நகரத்தின் வரலாற்றுத் தனித்துவமிக்கப் பண்பு காக்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.