2018-04-27 16:03:00

ஏப்ரல் 29 சமய சகிப்பற்றதன்மைக்குப் பலியாகுவோர்க்காக செபம்


ஏப்.27,2018. பாகிஸ்தானில், சமய சகிப்பற்றதன்மை மற்றும் பயங்கரவாத வன்முறை நிகழ்வுகள், அதிர்ச்சியூட்டும் முறையில் அதிகரித்துவரும்வேளை, இந்த வன்முறைகளுக்குப் பலியாகுவோரை நினைவுகூரும் செப நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் இணையுமாறு, அந்நாட்டு பேராயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏப்ரல் 29, இஞ்ஞாயிறன்று, பாகிஸ்தானில், சமய சகிப்பற்றதன்மைக்குப் பலியாகுவோர் மற்றும் நாட்டின் அமைதிக்காகச் செபிக்கும் நாளாக, அந்நாட்டின் தேசிய நீதி மற்றும் அமைதி அவை அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, இந்த அவையின் தலைவரும், பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவருமாகிய பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள், நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இச்செப நாள் அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Quettaவில் மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபை ஆலயம் தற்கொலை குண்டு வெடிப்பால் தாக்கப்பட்டது, லாகூரில், உறவினர்களான Patras, Sajid Masih ஆகிய இருவரும் தெய்வநிந்தனை குற்றச்சாட்டின்பேரில், மனிதமற்று நடத்தப்பட்டது, Suneel Masih, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் அடித்துக் கொல்லப்பட்டது உட்பட, அந்நாட்டில் அண்மையில் இடம்பெற்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளைப் பட்டியலிட்டுள்ளது, பாகிஸ்தானின் நீதி மற்றும் தேசிய அவை.

இதற்கிடையே, உலக அளவில் சமய சுதந்திரம் 2018 என்ற தலைப்பில், ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள, அமெரிக்க ஐக்கிய நாட்டு குழு ஒன்று, 2017ம் ஆண்டில், பாகிஸ்தான் உட்பட 28 நாடுகளில் சமய சுதந்திரம் கடுமையாய் மீறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.